வளர்ச்சி திட்டப்பணிகளை உரிய காலத்தில் முடிக்க வலியுறுத்தல்
வளர்ச்சி திட்டப்பணிகளை உரிய காலத்தில் முடிக்க வலியுறுத்தல்
உடுமலை,
உடுமலை ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி பகுதிகளில் வளர்ச்சித் திட்டப்பணிகளை தரமானதாகவும், உரிய காலத்திலும் செய்ய வேண்டும் என்று ஒப்பந்ததாரர்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
வளர்ச்சித் திட்டப்பணிகள்
உடுமலை ஊராட்சி ஒன்றியத்தில் 38 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சி பகுதிகளில் ஒன்றிய பொது நிதி, 15-வது நிதிக்குழு மானியம், தொகுதி வளர்ச்சி நிதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் நிதிகள் மூலமாக சாலை மேம்பாட்டுப்பணிகள், சமத்துவபுரம் மேம்பாட்டு பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளைச்செய்யும் ஒப்பந்ததாரர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் சார்பில் ஒன்றியக்குழு கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் மு.மகாலட்சுமி முருகன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கே.ஏ.சண்முகவடிவேல், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் எஸ்.மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வைப்புத்தொகை
உடுமலை ஒன்றியத்தில் நடைபெற்றுவரும் வளர்ச்சி திட்ட பணிகளை தரமானதாக செய்ய வேண்டும். அதேசமயம் உரிய காலத்திற்குள் செய்து முடிக்க வேண்டும் என்று உடுமலை ஒன்றிய நிர்வாகம் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
கூட்டத்தில் ஒப்பந்ததாரர்கள் பேசும்போது வளர்ச்சி திட்டபணிகளை செய்வதற்கு ஒப்பந்தத்திற்காக வைப்புத்தொகை செலுத்துகிறோம். இதில் பணி ஒப்பந்தம் கிடைக்காத ஒப்பந்ததாரர்களுக்கு வைப்புத்தொகையை நிர்வாகம் விரைவில் திருப்பித்தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.