முதுமலையில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்


முதுமலையில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 1 April 2023 12:15 AM IST (Updated: 1 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

முதுமலைக்கு வருகிற 9-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி வருகை தர உள்ளார். இதைத்தொடர்ந்து முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நீலகிரி

கூடலூர்,

முதுமலைக்கு வருகிற 9-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி வருகை தர உள்ளார். இதைத்தொடர்ந்து முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

முதுமலைக்கு மோடி வருகை

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள முகாமில் பராமரிக்கப்பட்டு வரும் ரகு, பொம்மி என்ற குட்டி யானைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்துக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது. இதைத்தொடர்ந்து அந்த படத்தில் இடம்பெற்ற பாகன் தம்பதி பொம்மன், பெள்ளி ஆகியோரை ஜனாதிபதி, பிரதமர், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட அனைத்து தரப்பினரும் பாராட்டினர்.

இந்தநிலையில் வருகிற 9-ந் தேதி புலிகள் பாதுகாப்பு திட்டத்தின் 50-வது ஆண்டு விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி கர்நாடகா மாநிலம் பந்திப்பூர், தமிழ்நாட்டின் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடுக்கு வருகை தர உள்ளதாக மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை மந்திரி பூபேந்தர் யாதவ் டெல்லியில் அறிவித்தார். அப்போது பாகன் தம்பதி பொம்மன், பெள்ளியை சந்திப்பார் எனவும் தெரிவித்தார். பின்னர் கேரளாவில் உள்ள வயநாடு சரணாலயத்துக்கு செல்கிறார்.

சாலை அமைக்கும் பணி

முதுமலை புலிகள் காப்பகத்திற்கு பிரதமர் மோடி வருகை தருவதையொட்டி, அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து தெப்பக்காட்டில் இருந்து மாயாறு தரைப்பாலம் வழியாக வளர்ப்பு யானைகள் முகாமுக்கு செல்லும் குண்டும், குழியுமான சாலையை புதுப்பிக்கும் பணி நேற்று தொடங்கியது. தொடர்ந்து முகாம் வளாகத்தில் நடந்து செல்லும் வகையில் நடைபாதைகளும் அமைக்கப்பட்டு வருகிறது.

இதேபோல் வளர்ப்பு யானைகள் முகாமுக்கு செல்லும் சாலையை அகலப்படுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து மாயாற்றின் கரையோரம் இருக்கைகள் அமைத்து, அதன் அழகை ரசிக்கும் வகையில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து ஆதிவாசி கிராமங்களுக்கு செல்லும் வகையில் நடைபாதை அமைக்கப்பட்டு வருகிறது.

வனத்துறையினர் ஆலோசனை

இதற்கிடையே தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம் வளாகத்தில் புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் வனத்துறையினருடன் நேற்று ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து வனத்துறை சார்பில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார். ஆய்வின்போது துணை இயக்குனர் வித்யா, வனச்சரகர்கள் மனோகரன், மனோஜ், விஜயன், பவித்ரா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதுகுறித்து பாகன் பெள்ளி கூறும்போது, பிரதமர் நரேந்திர மோடி முதுமலைக்கு வந்து எங்களை பார்க்க உள்ளார் என்ற தகவல் சந்தோஷமாக உள்ளது. அப்போது அவரிடம் ஆதிவாசி மக்களுக்கு உள்ள பிரச்சினைகள் குறித்து பேசுவேன் என்றார்.


Next Story