ரூ.4¼ கோடியில் வளர்ச்சித்திட்ட பணிகள்


ரூ.4¼ கோடியில் வளர்ச்சித்திட்ட பணிகள்
x

குமரி மாவட்டத்தில் ரூ.4¼ கோடியில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை கலெக்டர் அரவிந்த் நேரில் ஆய்வு செய்தார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் ரூ.4¼ கோடியில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை கலெக்டர் அரவிந்த் நேரில் ஆய்வு செய்தார்.

ரூ.4¼ கோடியில் வளர்ச்சி பணிகள்

குமரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் தோவாளை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.4 கோடியே 38 லட்சத்தில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை நேற்று கலெக்டர் அரவிந்த் நேரில் ஆய்வு செய்தார்.

அதைத்தொடர்ந்து கலெக்டர் அரவிந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-

குமரி மாவட்டத்திற்கு உட்பட்ட மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. தடிக்காரன்கோணம் ஊராட்சி பகுதியில் மாநில உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதி திட்டத்தின் கீழ் ரூ.3½ கோடியில் கீரிப்பாறை ரப்பர் தொழிற்சாலை மற்றும் தொழிலாளர் காலனிக்கு செல்வதற்கு புதிதாக 2 பாலங்கள் அமைக்கும் பணி ஆய்வு செய்யப்பட்டது.

சத்துணவு தரம் ஆய்வு

அருமநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட அரசு தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு செய்து மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து தலைமை ஆசிரியரிடம் விவரங்கள் கேட்கப்பட்டன. மேலும் ரூ.1.92 லட்சம் மதிப்பில் வீரவநல்லூரில் கிடைமட்ட உறிஞ்சுக்குழி அமைக்கும் பணி முடிக்கப்பட்டிருந்ததை ஆய்வு செய்தேன்.

இறச்சகுளம் ஊராட்சி பகுதியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.15.27 லட்சம் மதிப்பில் இறச்சகுளம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க கட்டிட பணியும் ஆய்வு செய்யப்பட்டது. ரூ.4.29 லட்சம் மதிப்பில் இறச்சகுளம் பிளசன்ட் நகரில் அமைக்கப்பட்டிருந்த சிமெண்ட் கான்கிரீட் நடைப்பாதையினையும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கூட்டமைப்பு கட்டிட பணி

தொடர்ந்து ஈசாந்திமங்கலம் ஊராட்சி பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு கட்டிட பணிகளும் ஆய்வு செய்யப்பட்டன. இப்படி மொத்தம் ரூ.4.38 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டப் பணிகள் நேரில் ஆய்வு செய்யப்பட்டது. பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு கலெக்டர் அரவிந்த் கூறினார்.

ஆய்வின்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, தடிக்காரன்கோணம் ஊராட்சி மன்ற தலைவர் பிராங்கிளின் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story