பட்டுக்கோட்டை நகராட்சியில் ரூ.2 கோடியே 45 லட்சத்தில் வளர்ச்சி பணிகள்
பட்டுக்கோட்டை நகராட்சியில் ரூ.2 கோடியே 45 லட்சத்தில் வளர்ச்சி பணிகள்
பட்டுக்கோட்டை
பட்டுக்கோட்டை நகராட்சியில் ரூ.2 கோடியே 45 லட்சத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் ஆய்வு செய்தார்.
ஆய்வு
பட்டுக்கோட்டை நகராட்சியில் நடைபெற்று வரும் தூய்மைப்பணிகள் மற்றும் வளர்ச்சி பணிகளை நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் ஜானகி ரவீந்திரன் நேரில் பார்வையிட்டு திடீர் ஆய்வு செய்தார். அப்போது நகராட்சி அலுவலகம் பகுதி, லெட்சத்தோப்பு, பண்ணவயல் சாலையில் உள்ள உரக்கிடங்கு பகுதி, அண்ணா குடியிருப்பு, தட்டாங்குளம் ஆகிய பகுதியில் உள்ள ஐந்து நுண்ணுர மையங்களை ஆய்வு செய்தார்.
அதனை தொடர்ந்து பட்டுக்கோட்டை பஸ் நிலைய சுகாதாரப்பணிகள் முழுவதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் காசாங்குளம் பகுதியில் 15 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டியினை மாடிக்கு சென்று சுத்தமாக உள்ளதா? என்று பார்வையிட்டார். முன்னதாக சுண்ணாம்புகார தெரு பகுதிக்கு சென்ற அவர், அங்குள்ள பொதுமக்களிடம் உங்கள் வீடுகளுக்கு தினசரி திடக்கழிவு மேலாண்மை வாகனம் வருகிறதா? வரக்கூடிய தூய்மை பணியாளர்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து கேட்கிறார்களா? என்பதை கேட்டறிந்தார்.
நவீன எரிவாயு தகன மேடை
தொடர்ந்து பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் உட்புற நோயாளிகளின் உதவியாளர்கள் தங்கும் அறை கட்டிட பணிகளை பார்வையிட்டார். நரியம்பாளையம் பகுதியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டிட பணிகளையும், செம்பிரான்குளம் பகுதியில் ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நவீன எரிவாயு தகன மேடை பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது நடைபெற்று வரும் பணிகள் குறித்து நகராட்சி ஆணையரிடம் விவரம் கேட்டறிந்தார்.
விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தல்
பணிகளை விரைந்து முடிக்கவும், குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என பொதுமக்களிடம் பிரித்து வாங்கவும், அதே சமயத்தில் என் குப்பை என் பொறுப்பு என்பதை குறித்து பொதுமக்களிடம் அதிக அளவு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தினார். ஆய்வின் போது நகராட்சி ஆணையர் குமார், உதவி பொறியாளர் தியாகராஜன், துப்புரவு அலுவலர் நெடுமாறன், துப்புரவு ஆய்வாளர்கள் ரவிச்சந்திரன், அறிவழகன், ஆரோக்கியசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.