சீனிவாச பெருமாள் கோவில் தேரோட்டம் 100 ஆண்டுக்கு பிறகு நடந்ததால் பக்தர்கள் பரவசம்
ஆரணி சீனிவாச பெருமாள் கோவில் தேரோட்டம் 100 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
ஆரணி
ஆரணி சீனிவாச பெருமாள் கோவில் தேரோட்டம் 100 ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
சீனிவாச பெருமாள் கோவில்
ஆரணி கொசப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள அலர்மேலு மங்கை சமேத சீனிவாச பெருமாள் கோவில் பழமை வாய்ந்தது. ஆரணி உருவான காலத்திலேயே இந்த கோவிலும் உருவானது.
சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்புவரை தேரோட்டம் நடந்தது.
அதன்பிறகு தேர்சிதிலம் அடைந்த நிலையில் அதனை புதுப்பிக்காமல் விட்டதால் தேரோட்டமே நின்று விட்டது. 2 தலைமுறைகளாக தேர் ஓடாத நிலையில் இப்போதைய தலைமுறையினரும், வருங்கால சந்ததிகளும் தேரோட்டத்தை அறிந்து கொள்ள முடியாமல் போனது.
இந்த நிலையில் புதிய தேர் உருவாக்க ரூ.28 லட்சத்தை அப்போது அமைச்சராக இருந்த சேவூர் ராமச்சந்திரன் முயற்சியால் ஒதுக்கப்பட் டது.
அதன்படி புதிய மரத்தேர் ஆன்மிக அம்சங்களுடன் பொதுமக்கள் பங்களிப்புடன் உருவாக்கப்பட்டது. புரட்டாசி பிரம்மோற்சவ விழாவில் தேரோட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு வெள்ளோட்டமும் நடைபெற்றது.
தொடர்ந்து கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது, தொடர்ந்து காலை, மாலை இரு வேளையும் உற்சவர் திருவீதி உலா நடைபெற்றது.
தேரோட்டம்
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று காலை நடந்தது. அனைத்து துைற சார்பிலும் இதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தேர் மாடவீதியான சின்ன கடை தெரு, பழனியாண்டவர் கோவில் தெரு, பாட்ஷா தெரு, சின்ன சாயக்கார தெரு பெரிய ஜெயின் தெரு வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது.
தேரோட்டத்தை முன்னாள் அமைச்சரான சேவூர் எஸ். ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., மத்திய கூட்டுறவு வங்கி துணை தலைவர் வக்கீல் கே.சங்கர், நகர மன்ற தலைவர் ஏ.சி.மணி, துணைத் தலைவர் பாரி பி.பாபு, கோவில் முன்னாள் அறங்காவலர் அசோக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. தயாநிதி, தி.மு.க. நிர்வாகி எஸ். எஸ்.அன்பழகன் உள்பட திரளான பக்தர்கள் சங்கிலி பிடித்து இழுத்தனர்.
உப்பு, மிளகு இறைப்பு
தேர் சென்ற வழியெங்கும் பக்தர்கள் திரண்டு நின்று பரவசத்துடன் வழிபட்டனர். தேர் செல்லும் பாதையில் பக்தர்கள் உப்பு, மிளகு, பொரி உருண்டை, சாக்லேட் இனிப்பு போன்றவைகளை தேர் மீது இறைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
நூறாண்டுகளுக்கு பிறகு தேர் அப்பகுதியில் செல்வது கடந்த 2 தலைமுறைகளுக்கு தெரியாத நிலையை இந்த தேர் சொல்வது பெரிய வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.