பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்


பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
x

வாரவிடுமுறையையொட்டி பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.

திண்டுக்கல்

தமிழகத்தில் சிறந்த ஆன்மிக தலமாகவும், அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடாகவும் பழனி முருகன் கோவில் திகழ்கிறது. இங்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். குறிப்பாக திருவிழா காலங்களில் காவடி எடுத்து பழனிக்கு வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.

இந்தநிலையில் பழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா நாளை (திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவையொட்டி, ஏராளமான பக்தர்கள் பழனிக்கு வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். மேலும் பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்தும் வருவர். அவ்வாறு வரும் பக்தர்கள், முடிக்காணிக்கை செலுத்தி முருகப்பெருமானை தரிசனம் செய்கின்றனர். வார விடுமுறை என்பதால் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மலைக்கோவிலின் தரிசன வழிகள், வெளிப்பிரகாரம், படிப்பாதை மற்றும் ரோப்கார், மின்இழுவை ரெயில்நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. எனவே சுமார் 2 மணி நேரம் காத்திருந்த பின்னரே பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மேலும் அதிகாலை முதலே கார், பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களில் பக்தர்கள் பழனிக்கு வந்ததால் அடிவாரம் ரோடு, பூங்கா ரோடு, கிரிவீதிகளில் பகுதிகளில் கடும் நெரிசல் காணப்பட்டது. தீர்த்தக்காவடி எடுத்து மேள, தாளத்துடன் ஏராளமான பக்தர்கள் கிரிவீதிகளில் வலம் வந்தனர். இன்னும் ஒரிரு நாட்களில் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் சாமி தரிசனம் செய்த பின்பு பக்தர்கள் தங்களது ஊருக்கு திரும்புவதற்காக பழனி பஸ் நிலையத்தில் குவிந்தனர். இதனால் பஸ்களில் கூட்டம் அதிகமாக இருந்தது.


Next Story