30 அடி உயர தேரை தோளில் சுமந்து வலம் வந்த பக்தர்கள்


30 அடி உயர தேரை தோளில் சுமந்து வலம் வந்த பக்தர்கள்
x
தினத்தந்தி 8 April 2023 12:15 AM IST (Updated: 8 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மேல்பாதி கிராமத்தில் 30 அடி உயர தேரை தோளில் சுமந்து பக்தர்கள் வலம் வந்தனர்.

விழுப்புரம்

விழுப்புரம்:

விழுப்புரம் அருகே மேல்பாதி கிராமத்தில் பிரசித்தி பெற்றதும், பழமைவாய்ந்ததுமான தர்மராஜா, திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் ரத உற்சவ தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

மேலும் இக்கோவிலில் 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தர்மராஜா பட்டாபிஷேக திருவிழா கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. இவ்விழாவை தொடர்ந்து தற்போது ரத உற்சவ தீமிதி திருவிழா கடந்த மாதம் 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் சிங்க வாகனம், கருட வாகனம், விமானம், அன்ன வாகனம், யானை வாகனங்களில் சாமி திருவீதி உலா நடைபெற்றது.

தூக்குதேர்

விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் இரவு பூங்கரகமும், திருத்தேர் வீதிஉலாவும் நடந்தது. இதையொட்டி 30 அடி உயரமுள்ள தேர் அலங்கரிக்கப்பட்டது. அந்த தேரில் தர்மராஜா, திரவுபதியம்மன் சாமிகள் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளினர்.

பின்னர் அந்த தேரை 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள், தங்கள் தோளின் மீது சுமந்தவாறு மேல்பாதி கிராமத்தின் அனைத்து வீதிகளிலும் வலம்வந்தனர். இந்த தேரானது, மேல்பாதி கிராமத்தின் அனைத்து வீதிகளிலும் வலம்வந்து நேற்று மாலை மீண்டும் கோவிலை சென்டைந்தது. 30 அடி உயரம் கொண்ட இந்த தேரை சக்கர வண்டியில் வைத்து இரும்புச்சங்கிலி மூலம் வடம்பிடித்து இழுக்காமல் பக்தர்கள் தங்கள் தோளின் மீது வைத்து கிராம வீதிகள்தோறும் வலம் வந்தனர். இந்த காட்சியை பார்வையிட்ட பக்தர்கள் அனைவரும் மெய்சிலிர்த்தனர்.

பக்தர்கள் தரிசனம்

தொடர்ந்து, நேற்று மாலையில் பாரத சொற்பொழிவும், கோட்டை கலைப்பது நிகழ்ச்சிகளும் நடந்தது. பின்னர் மாலை 6 மணிக்கு தீமிதி விழா நடைபெற்றது. இதற்காக கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் ஏராளமான பக்தர்கள் இறங்கி பயபக்தியுடன் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர்கள் மற்றும் மேல்பாதி கிராம மக்கள் செய்திருந்தனர்.


Next Story