பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்; 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்
பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி பழனி முருகன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். சுமார் 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி பழனி முருகன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். சுமார் 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
தொடர் விடுமுறை
தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம்படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்தநிலையில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதையொட்டி கடந்த சில நாட்களாக பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருந்தது.
குறிப்பாக வெளியூர்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். இதேபோல் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பாதயாத்திரை பக்தர்களும் படையெடுத்தனர்.
பக்தர்கள் குவிந்தனர்
இந்தநிலையில் பழனி முருகன் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் பழனி முருகன் கோவிலில் குவிந்தனர். இதனால் பழனி கிரிவீதிகள், சன்னதி வீதி, பாதவிநாயகர் கோவில், திருஆவினன்குடி கோவில் ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது.
மேலும் அடிவாரத்தில் மலைக்கோவிலின் நுழைவு பகுதியான பாதவிநாயகர் கோவிலில் குவிந்த பக்தர்கள், படிப்பாதை, யானை பாதை வழியாக மலைக்கோவிலுக்கு சென்றனர்.
2 மணி நேரம்
இதேபோல் மலைக்கோவிலுக்கு செல்ல ரோப்கார் நிலையம், மின்இழுவை ரெயில் நிலையத்தில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மேலும் மலைக்கோவிலின் வெளி பிரகாரத்திலும், பொது மற்றும் கட்டண தரிசன வழிகளிலும் பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். சுமார் 2 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.