பக்தி பரவசத்துடன் பூக்குழி இறங்கிய பக்தர்கள்
செம்பட்டி அருகே, மண்டு கருப்பணசாமி கோவில் திருவிழாவையொட்டி பக்தி பரவசத்துடன் பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.
செம்பட்டி அருகே பாளையங்கோட்டை கிராமத்துக்கு உட்பட்ட காமன்பட்டியில் முத்துமாரியம்மன், மண்டு கருப்பணசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த மாதம் கும்பாபிஷேகம் நடந்தது. இதில், அம்மனுக்கு 48 நாட்கள் பூஜைகளுக்கு பிறகு 3 நாள் திருவிழா தொடங்கியது. இதையொட்டி நேற்று முன்தினம் இரவு, பூஞ்சோலையில் இருந்து வாணவேடிக்கை மற்றும் மேளதாளத்துடன் அம்மனை அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது.
இதைத்தொடர்ந்து தங்க கொடிமரம் அபிஷேகம், கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று அதிகாலை அம்மனுக்கு மாவிளக்கு எடுக்கும் நிகழ்ச்சியைதொடர்ந்து, பக்தர்கள் பூக்குழி இறங்கினர். இதையொட்டி கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில், காமன்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பூக்குழி இறங்கி அம்மனை வழிபட்டனர்.
இதேபோல் அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். பொங்கல் வைத்து, கிடா வெட்டி அம்மனை பெண்கள் வழிபட்டனர். விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று (வியாழக்கிழமை) அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் ஊர் சார்பில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளது. மேலும், மஞ்சள் நீராடுதல், வேடம் போட்டு ஆடுதல், அம்பாளுக்கு தீர்த்தவாரி எடுத்தல், தெப்ப உற்சவம் ஆகியவை நடைபெறுகிறது. இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.