பக்தி பரவசத்துடன் பூக்குழி இறங்கிய பக்தர்கள்
வடமதுரை மாரியம்மன் கோவில் மாசித்திருவிழாவையொட்டி பக்தி பரவசத்துடன் பக்தா்கள் பூக்குழி இறங்கினர்.
வடமதுரை மாரியம்மன் கோவிலில் மாசி பெருந்திருவிழா, கடந்த மாதம் 25-ந்்தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினமும் பல்வேறு மண்டகப்படிதாரர்கள் சார்பில் கலை நிகழ்ச்சி, அலங்கார ரதத்தில் அம்மன் வீதி உலா நிகழ்ச்சி நடந்தது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான பூக்குழி திருவிழா நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதற்காக, வடமதுரை மங்கம்மாள் கேணி அருகே 15 அடி சுற்றளவில் குழி அமைக்கப்பட்டு நெருப்பு மூட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து வடமதுரை ஏழுமலையான் கோவிலில் இருந்து பூசாரியை பக்தர்கள் ஊர்வலமாக அழைத்து வந்தனர். ஒரு கையில் தீப்பந்தத்தையும், மற்றொரு கையில் சாட்டை ஏந்தியபடியும் வந்தார். அந்த சாட்டையால், தன்னை அடித்தவாறே பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.
இதேபோல் பூக்குழி அருகே வந்து, அரிவாள் மீது ஏறி நின்று பக்தர்களுக்கு பூசாரி ஆசி வழங்கினார். அதன்பின்னர் அவர் முதலில் பூக்குழியில் இறங்கினார். அவரைத்தொடர்ந்து ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என ஏராளமான பக்தர்கள் ஒருவர் பின் ஒருவராக பூக்குழி இறங்கினர். 'ஓம் சக்தி பராசக்தி' என்று கோஷம் முழங்கியபடி பக்தி பரவசத்துடன் பக்தர்கள் பூக்குழி இறங்கி, தீ மிதித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் சூரியன் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.