புரட்டாசி கடைசி சனிக்கிழமை: பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம்
சனிக்கிழமையையொட்டி குமரி மாவட்ட பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
நாகர்கோவில்,
புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி குமரி மாவட்ட பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
பெருமாள் கோவில்
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இதனால் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு பக்தர்கள் சென்று வழிபாடு நடத்துவார்கள். இதனால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
இந்தநிலையில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையான நேற்று குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டு அபிஷேகம், தீபாராதனை போன்றவை நடந்தது. இந்த பூஜைகளில் பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். இதனால் பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
திருவட்டார்
திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் காலையில் சிறப்பு பூஜைகள், மதியம் ஸ்ரீபலி பூஜை, அன்னதானம், மாலையில் கிருஷ்ணன் சன்னதியில் முழுக்காப்பு வழிபாடு போன்றவை நடந்தது. இதை காண பக்தர்கள் நீண்டவரிசையில் காத்து இருந்தனர். பக்தர்களுக்கு ஆதிகேசவ பக்த சங்க அறக்கட்டளை சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.
வடிவீஸ்வரம்
நாகர்கோவில் வடிவீஸ்வரம் இடர்தீர்த்த பெருமாள் கோவிலில் நேற்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதுபோல் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர கடற்கரை வளாகத்தில் அமைந்துள்ள திருப்பதி வெங்கடாசலபதி கோவில், திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோவில், பறக்கை மதுசூதன பெருமாள் கோவில், சுசீந்திரம் துவாரகை கிருஷ்ணன் கோவில், நாகர்கோவில் கிருஷ்ணன் கோவிலில் உள்ள கிருஷ்ணசாமி கோவில், கோட்டார் வாகையடி தெருவில் உள்ள ஏழகரம் பெருமாள் கோவில், வட்டவிளை தென்திருப்பதி வெங்கடாசலபதி கோவில் உள்பட அனைத்து பெருமாள் கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.