புரட்டாசி மாதப்பிறப்பையொட்டி பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில், 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் புரட்டாசி மாத பிறப்பையொட்டி நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில், 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் புரட்டாசி மாத பிறப்பையொட்டி நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக அடிவாரம் பாதவிநாயகர் கோவில், மலைக்கோவில், ரோப்கார், மின்இழுவை ரெயில் நிலையம், தரிசன வழிகள் ஆகியவற்றில் பக்தர்கள் குவிந்தனர்.
பழனி மலைக்கோவில் வெளிப்பிரகாரத்தில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். சுமார் 2 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் புரட்டாசி மாதப்பிறப்பையொட்டி மலைக்கோவில் ஆனந்தவிநாயகர் சன்னதியில் சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், வெள்ளிக்கவச அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். இதேபோல் பழனி பகுதியில் உள்ள பெருமாள் கோவில்களிலும் புரட்டாசி மாத பிறப்பையொட்டி ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய குவிந்தனர்.