பழனி இடும்பன் கோவிலில் பக்தர்கள் திடீர் போராட்டம்
பழனி இடும்பன் கோவிலில், முடிக்காணிக்கை செலுத்த பணம் கேட்டதால் பக்தர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முடிக்காணிக்கை
உலக பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு திருவிழா மட்டுமின்றி தினமும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் முடிக்காணிக்கை செலுத்தி நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர். இதற்காக பழனி அடிவார பகுதியில் முடிக்காணிக்கை செலுத்தும் நிலையங்கள் உள்ளன. அதேபோல் பக்தர்கள் புனித நீராடும் சண்முகநதி, இடும்பன்குளம் ஆகிய பகுதிகளிலும் முடிக்காணிக்கை செலுத்தும் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இங்கும் ஏராளமான பக்தர்கள் முடிக்காணிக்கை செலுத்தி, புனித நீராடி செல்கின்றனர்.
தமிழகம் முழுவதும் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பக்தர்கள் கட்டணம் ஏதுமின்றி முடிக்காணிக்கை செலுத்தலாம் என சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. ஆனாலும் சில கோவில்களில் முடிக்காணிக்கை செலுத்தும் இடங்களில் தொழிலாளர்கள் கட்டணம் வசூலிப்பதாக பக்தர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
பக்தர்கள் போராட்டம்
இந்நிலையில் பழனி முருகன் கோவிலில் கடந்த 4-ந்தேதி தைப்பூச திருவிழா நடைபெற்றது. அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். திருவிழா முடிந்த போதிலும் பழனிக்கு பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கருப்பூர் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பழனிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் பழனி இடும்பன் கோவில் பகுதியில் உள்ள முடிக்காணிக்கை செலுத்தும் நிலையத்துக்கு சென்றனர். அப்போது அங்குள்ள தொழிலாளர்கள் முடிக்காணிக்கை செலுத்த பணம் கேட்டதாக கூறப்படுகிறது. இதற்கு பக்தர்கள் பணம் கொடுக்க மறுத்தனர். ஆனாலும் பணம் கொடுக்க வேண்டும் என்று அங்கிருந்த தொழிலாளர்கள் கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பக்தர்கள் இடும்பன் கோவில் முன் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
தகவலறிந்த பழனி இடும்பன் கோவில் அலுவலர்கள் மற்றும் பழனி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் பக்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது முடிக்காணிக்கை செலுத்த தொழிலாளர்கள் பணம் கேட்டது குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் இடும்பன் கோவில் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.