குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவிற்கு திறந்த வாகனத்தில் பக்தர்கள் செல்லகூடாது: போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன்
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவிற்கு திறந்த வாகனத்தில் பக்தர்கள் செல்லகூடாது என்று போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் எச்சரித்துள்ளார்.
தூத்துக்குடி:
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் ஆபாச நடனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது, திறந்த வாகனங்களில் பக்தர்களை ஏற்றி வருவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஆபாச நடனங்களுக்கு தடை
குலசேகரன்பட்டினத்தில் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. அடுத்த மாதம் 5-ந்தேதி வரை விழா நடைபெற உள்ளது. உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி தசரா திருவிழாவின்போது ஊருக்கு உள்ளே, வெளியே எந்த ஒரு பகுதியிலும் ஆபாச நடனங்கள் ஆடுவதற்கும், ஆபாசப் பாடல்கள், சினிமா பாடல்கள் இசைப்பதற்கும், தகாத வார்த்தைகள் உபயோகிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆடல், பாடல் கலை நிகழ்ச்சிகளை நடத்த உரிய அனுமதி பெற்று, அதனை முழுவதுமாக வீடியோ பதிவு செய்ய வேண்டும்.
போலீஸ் சோதனை சாவடி
குலசேகரன்பட்டினம் உடன்குடி சுற்றுவட்டாரப் பகுதியில் ஆங்காங்கே கண்காணிப்பு கேமிராக்களுடன் தற்காலிக போலீஸ் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. திறந்த வாகனங்களில் பக்தர்களை ஏற்றி வந்தால் அந்த வாகனத்தின் டிரைவர் உரிமையாளர் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கோவிலுக்கு வரும் பக்தர்கள் வேல், சூலாயுதம், வாள் போன்று உலோகத்தாலான எந்தப் பொருட்களையும் கொண்டு வரக்கூடாது.
ஜாதி அடையாளம் கூடாது
ஜாதி சின்னங்களுடன் கூடிய உடைகளோ, தொப்பி, கொடிகள், ரிப்பன்கள் ஆகியவை அணிந்துவரவோபோலீஸ் துறையினரை போன்று சீருடை அணிந்து வேடமிட்டு வரவோ, அதிக சத்தத்துடன் டிரம் அடித்து ஒலி எழுப்பி சுற்றுச் சூழலுக்கு பங்கம் ஏற்படுத்தினாலோ, ஜாதி சம்பந்தமான கோஷங்கள் மற்றும் சைகைகள் ஏற்படுத்தவோ அனுமதி இல்லை. போலீஸ் முன் அனுமதியின்றி திருவிழா சம்மந்தமாக கோவில் பகுதிகள் மற்றும் எந்த தனியார் அல்லது பொது இடத்திலும் ஒலிபெருக்கி பயன்படுத்தவோ ஆடல், பாடல் போன்ற இசைநிகழ்ச்சிகளோ, எந்த விதமான கலை நிகழ்ச்சிகள் நடத்தவோ, ராட்டிணங்கள் அமைத்து தொழில் செய்யவோ, யாருக்கும் அனுமதியில்லை.
கடும் நடவடிக்கை
பக்தர்கள் தசரா குழுக்களாக வந்து முக்கிய சந்திப்புகளை கடக்கும் போது அவ்விடத்தில் அதிக நேரத்தில் நிறுத்திக் கொண்டு வாணவேடிக்கைகள் நடத்தவோ, நன்கொடை பெறவோ, இசைக்கருவிகளை இசைத்துக் கொண்டோ மற்ற பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடைஞ்சல் ஏற்படுத்த கூடாது. மேற்படி விதிமுறைகளை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.