திருவட்டார் கோவில் கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் தவற விட்ட செருப்புகளை அப்புறப்படுத்த வேண்டும்; பொதுமக்கள் வலியுறுத்தல்
திருவட்டார் கோவில் கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் தவற விட்ட செருப்புகளை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவட்டார்,
திருவட்டார் கோவில் கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் தவற விட்ட செருப்புகளை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோரிக்கை
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கடந்த 6-ந் ்தேதி கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் கோவிலின் கிழக்குப்பகுதி வழியாக சுற்றி வந்து மேற்குவாசல் வழியாக உள்ளே அனுமதிக்கப்பட்டனர். கோவிலுக்குள் சென்ற பக்தர்கள் கிழக்கு வாசலையொட்டிய வளாகத்தில் தங்களுடைய செருப்புகளை கழற்றிபோட்டு விட்டு கோவிலுக்குள் சென்றனர். சாமி கும்பிட்ட பின்பு தெற்குப்பக்கம் உள்ள பாதை வழியாக வெளியேற்றப்பட்டனர்.
அவர்கள் கிழக்கு வாசல் வளாகத்தில் போட்டுள்ள செருப்புகளை எடுக்க வேண்டும் என போலீசாரிடம் கூறியபோதும் அவர்களை போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் பலரும் செருப்புகளை எடுக்காமல் வீட்டுக்கு திரும்பினர். இதனால் தற்போது கிழக்கு வாசல் வளாகத்தில் ஏராளமான செருப்புகள் குவிந்து கிடக்கிறது.
பக்தர்கள் செருப்புகளை எங்கு போடவேண்டும், அவற்றை எப்படி திரும்ப எடுக்க வேண்டும் எனக்கூறாததால் தற்போது சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் செருப்புகள் கோவிலைச்சுற்றி பல்வேறு இடங்களில் குவியலாக காணப்படுகிறது. அவற்றை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், இனிமேலாவது கும்பாபிஷேகம் நடைபெறும் கோவில்களில் உரிய ஏற்பாடுகள் முறைப்படி செய்ய வேண்டும் என்று பக்தர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.