பழனி முருகன் கோவிலுக்கு படையெடுத்த பக்தர்கள்
வாரவிடுமுறை, ஆயுதபூஜை என தொடர் விடுமுறையையொட்டி பழனி முருகன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் படையெடுத்தனர்.
வாரவிடுமுறை
அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். தைப்பூசம், பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை உள்ளிட்ட திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர். அது மட்டுமின்றி சுபமுகூர்த்தம், மாதகிருத்திகை, வாரவிடுமுறை, பள்ளி விடுமுறை நாட்களிலும் பழனிக்கு பக்தர்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர்.
அந்தவகையில் நேற்று வாரவிடுமுறை நாளாகும். நாளை ஆயுதபூஜை, விஜயதசமி கொண்டாடப்படுவதால் அரசு விடுமுறை நாளாகும். மேலும் தற்போது பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டு உள்ளதால் தங்கள் குடும்பத்துடன் ஆன்மிக மற்றும் சுற்றுலா தலங்களுக்கு மக்கள் படையெடுத்து வருகின்றனர். அதன்படி பழனி முருகன் கோவிலில் நேற்று காலை முதலே சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர். இதனால் கிரிவீதி, சன்னதிவீதி, திருஆவினன்குடி கோவில் ஆகிய இடங்களில் பக்தர்கள் குவிந்தனர்.
நீண்ட வரிசை
அதேபோல் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்லும் வழிகளான படிப்பாதை, யானைப்பாதை, ரோப்கார், மின்இழுவை ரெயில்நிலையம் ஆகிய இடங்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருந்தது. மேலும் பொது, கட்டளை, கட்டண தரிசனம் உள்ளிட்ட அனைத்து தரிசன வழிகள், மலைக்கோவில் வெளிப்பிரகாரம் ஆகிய இடங்களில் தரிசனத்துக்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அந்தவகையில் நேற்று 2 மணி நேரம் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.