பழனி முருகன் கோவிலுக்கு படையெடுத்த பக்தர்கள்
வாரவிடுமுறையையொட்டி பழனி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் படையெடுத்தனர். சுமார் 1½ மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
படையெடுத்த பக்தர்கள்
அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். திருவிழா காலங்களில் அலகு குத்தியும், காவடி எடுத்தும் வந்து பக்தர்கள் தரிசனம் செய்வர்.
இதேபோல் வார விடுமுறை, சஷ்டி, மாத கார்த்திகை உள்ளிட்ட விசேஷ நாட்களில் வெளியூர்களில் இருந்து பக்தர்கள் திரளாக பழனிக்கு வருகை தருவார்கள். அதன்படி நேற்று வார விடுமுறை என்பதால் பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்கள் படையெடுத்தனர்.
குறிப்பாக கேரள மாநில பக்தர்கள் அதிகளவில் வருகை புரிந்தனர். எனவே அதிகாலை முதலே அடிவாரம், பாதவிநாயகர் கோவில், மலைக்கோவில், திருஆவினன்குடி ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
1½ மணி நேரம் காத்திருப்பு
வெளியூர்களில் இருந்து ஏராளமான வாகனங்களில் பக்தர்கள் வந்ததால் பழனியில் உள்ள சுற்றுலா பஸ்நிலையம் நிரம்பியது. எனவே தங்கள் வாகனங்களை கிரிவீதிகளில் நிறுத்தியதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பக்தர்கள் குவிந்ததன் காரணமாக கோவிலில் உள்ள பொது, கட்டணம், கட்டளை உள்ளிட்ட தரிசன வழிகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.
தரிசன வழிகளை கடந்து வெளிப்பிரகாரத்தில் நீண்ட வரிசையில் பக்தர்கள் நின்றனர். அவர்கள், சுமார் 1½ மணி நேரம் காத்திருந்து பின்னரே சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் பழனி முருகன் கோவிலில் அக்னி நட்சத்திர கழு திருவிழா இன்று (திங்கட்கிழமை) தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.