படிப்பாதையில் சூடம் ஏற்றுவதால் பக்தர்கள் அவதி


படிப்பாதையில் சூடம் ஏற்றுவதால் பக்தர்கள் அவதி
x

பழனி முருகன் கோவிலில், படிப்பாதையில் சூடம் ஏற்றுவதால் பக்தர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

திண்டுக்கல்

பழனி முருகன் கோவில்

அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவில் மலை மீது அமைந்துள்ளது. அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்ல படிப்பாதையே பிரதான பாதையாக உள்ளது. காவடி தூக்கி வரும் பக்தர்கள், அலகு குத்தி வருவோர் என நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் பெரும்பாலும் படிப்பாதை வழியாக சென்று வருகின்றனர்.

மின்இழுவை ரெயில், ரோப்கார் வழியாக செல்ல கட்டணம் செலுத்த வேண்டி உள்ளதால் சாதாரண ஏழை, எளிய பக்தர்கள் படிப்பாதை, யானைப்பாதையையே அதிகம் பயன்படுத்துகின்றனர். படிப்பாதை வழியாக செல்லும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

படிப்பாதையில் சூடம்

இதேபோல் படிப்பாதை வழியாக செல்லும் போது, பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளும் கோவில் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக படிப்பாதையில் உள்ள படிக்கட்டுகளில் சூடம் ஏற்றக்கூடாது என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது.

இருப்பினும் பலர், படிபூஜை எனக்கூறி வரிசையாக அனைத்து படிக்கட்டுகளில் சூடம் ஏற்றுகின்றனர். இவ்வாறு ஏற்றப்பட்ட சூடம் எரிந்து அணைந்த பின்பு, அந்த இடமே வெப்பமாக உள்ளது. ஆனால் சூடம் ஏற்றியது தெரியாமல் பின்னால் வரும் பக்தர்கள் அதன் மேல் நடக்கும்போது, சூட்டால் அவர்களின் கால்களில் காயம் ஏற்படுகிறது.

பக்தர்கள் அவதி

குறிப்பாக குழந்தைகள், முதியோர்கள் கடும் சிரமப்படுகின்றனர். எனவே படிப்பாதையில் பக்தர்கள் சூடம் ஏற்றுவதை தடுக்க போதிய பணியாளர்களை நியமித்து கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து பக்தர்கள் கூறும்போது, கோடைகாலம் முடிந்தாலும் தற்போது வெயில் கடுமையாக உள்ளது. எனவே மதிய நேரத்தில் படிகள் சூடாக உள்ளன. குறிப்பாக மலைக்கோவில் மேற்கு வெளிப்பிரகாரம் நுழையும் படிக்கட்டுகளில் வரிசையாக சூடம் ஏற்றுவதால், நடந்து செல்ல கடும் சிரமம் ஏற்படுகிறது. எனவே கோவில் நிர்வாகம் போதிய பணியாளர்களை நியமித்து சூடம் ஏற்றுவதை கண்காணிக்க வேண்டும் என்றனர்.

-----


Next Story