திருவண்ணாமலையில் பக்தர்கள் அவதி
விழுப்புரம் - திருப்பதி ரெயில் ஒரு மணி நேரம் தாமதமாக வந்ததால் திருவண்ணாமலையில் பக்தர்கள் அவதி அடைந்தனர்.
திருவண்ணாமலை
பவுர்ணமி நேற்று அதிகாலை முதல் இன்று அதிகாலை வரை இருந்ததால் கிரிவலம் செல்ல தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் மற்றும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்கள் என பல்வேறு பகுதியை சேர்ந்தவர்கள் திருவண்ணாமலைக்கு வந்தனர்.
இதனால் நேற்று மட்டுமின்றி இன்று அதிகாலை வரை பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
கிரிவலம் சென்று விட்டு வந்த பக்தர்கள் ரெயிலில் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்து திருவண்ணாமலை ரெயில் நிலையத்திற்கு இன்று அதிகாலை வந்தனர்.
விழுப்புரத்தில் இருந்து திருப்பதி நோக்கி செல்லும் ரெயிலில் பயணம் செய்வதற்காக திருவண்ணாமலை ரெயில் நிலையத்தில் ஏராளமான பயணிகள் காத்திருந்தனர்.
காலை 6.30 மணி அளவில் வரவேண்டிய விழுப்புரம்- திருப்பதி பயணிகள் ரெயில் காலை 7.45 மணிக்கு ஒரு மணி நேரத்துக்கு மேல் காலதாமதமாக திருவண்ணாமலை ரெயில் நிலையத்திற்கு வந்தது.
அங்கு கூடியிருந்த பக்தர்கள் ரெயிலில் இடம் பிடிப்பதற்காக ஒருவரை ஒருவர் முண்டியடித்துக் கொண்டு ரெயிலில் ஏற முயன்றனர். இதனால் அங்கு பயணிகள் இடையே சிறிது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
கிரிவலம் சென்று விட்டு களைப்பில் வந்த பக்தர்கள் ஒரு மணி நேரத்திற்கு மேல் ரெயிலுக்காக காத்திருந்ததால் அவர்கள் மிகவும் அவதி அடைந்தனர்.