ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய பக்தர்கள்
மாசி மாத அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் திரளான பக்தர்கள் புனித நீராடினர். திருவிழாவையொட்டி தங்க ரிஷப வாகனத்தில் ராமநாதசுவாமி-அம்பாள் தீர்த்தவாரிக்கு எழுந்தருளினர்.
ராமேசுவரம்,
மாசி மாத அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் திரளான பக்தர்கள் புனித நீராடினர். திருவிழாவையொட்டி தங்க ரிஷப வாகனத்தில் ராமநாதசுவாமி-அம்பாள் தீர்த்தவாரிக்கு எழுந்தருளினர்.
தீர்த்தவாரி பூஜை
ராமேசுவரம் கோவிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா கடந்த 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் 10-ம் நாள் மற்றும் மாசி அமாவாசைைய முன்னிட்டு, நேற்று காலை 9 மணிக்கு ராமநாதசுவாமி- பர்வதவர்த்தினி அம்பாள் இந்திர விமானத்தில் கோவிலில் இருந்து எழுந்தருளி, ரத வீதிகளில் உலா வந்தனர். தொடர்ந்து பகல் 12.30 மணிக்கு சுவாமி-அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் அக்னி தீர்த்த கடற்கரைக்கு தீர்த்தவாரி பூஜைக்கு எழுந்தருளினர்.
பின்னர் சுவாமி-அம்பாள் கடற்கரையில் உள்ள மண்டகப்படியில் வீற்றிருந்தனர். மாலை 6.30 மணிக்கு மண்டகப்படியில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்று மீண்டும் அங்கிருந்து பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி வீதிகளை வலம் வந்து மீண்டும் கோவிலை அடைந்தனர்.
புனித நீராடினர்
இதற்கிடையே மாசி மாத அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் அக்னிதீர்த்த கடலில் புனித நீராட நேற்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் கடலில் புனித நீராடிவிட்டு, கடற்கரையில் அமர்ந்து தங்களது முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டி திதி, தர்ப்பண பூஜை செய்து வழிபாடு செய்தனர். பின்னர் கோவிலில் தீர்த்த கிணறுகளில் நீராடிவிட்டு சாமி தரிசனம் செய்து சென்றனர்.
சிவராத்திரி விழாவின் 11-ம் நாள் நிகழ்ச்சியாக இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணிக்கு பிச்சாடனர் வீதி உலாவும், நிறைவு நாளான நாளை (22-ந் தேதி) இரவு 7 மணிக்கு சண்டிகேசுவரர் வீதி உலாவும் நடக்க உள்ளன.