சேத்தியாத்தோப்பு விநாயகபுரம் கருப்புசாமி கோவிலுக்கு 5,001 பால்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலம்


சேத்தியாத்தோப்பு விநாயகபுரம்  கருப்புசாமி கோவிலுக்கு 5,001 பால்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலம்
x

சேத்தியாத்தோப்பு விநாயகபுரம் கருப்புசாமி கோவிலுக்கு 5,001 பால்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர்.

கடலூர்

சேத்தியாதோப்பு,

சேத்தியாத்தோப்பு குறுக்கு ரோடு விநாயகபுரம் கருப்புசாமி கோவிலில் 22-ம் ஆண்டு ஆடி அமாவாசை திருவிழா கடந்த 25-ந்தேதி காப்புகட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அன்றைய தினம் சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றங்கரையில் இருந்து அங்காள பரமேஸ்வரி அம்மன் வீதி உலா நிகழ்ச்சியும், அம்மன் திருக்கல்யாண உற்சவமும் நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான பால்குட ஊர்வலம் ஆடி அமாவாசையான நேற்று காலை வெகுவிமரிசையாக நடைபெற்றது. விநாயகபுரம் கருப்புசாமி கோவில் அருள் வாக்கு சித்தர் ஆறுமுகசாமி தலைமையில் பக்தர்கள் 5, 001 பால்குடங்களை தலையில் சுமந்தபடி சேத்தியாத்தோப்பு சர்க்கரை ஆலை வளாகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக கருப்புசாமி கோவிலை வந்தடைந்தனர். அப்போது மேளதாளம் முழங்க பக்தர்கள் அலகு குத்தி ஊர்வலமாக வந்து சாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

முன்னதாக அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து, சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதன்பிறகு இரவு கோவில் வளாகத்தில் பக்தர்கள் ஆடு, கோழிகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து வில்லுப்பாட்டு மற்றும் விஜய் டிவி புகழ் செந்தில் கணேஷ்- ராஜலட்சுமி தம்பதியரின் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இரவு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை சேத்தியாத்தோப்பு விநாயகபுரம் கருப்புசாமி கோவில் விழா குழுவினர் செய்திருந்தனர்.


Next Story