பக்தர்கள் பால்குடம், அலகு காவடி எடுத்து ஊர்வலம்
சீர்காழி புற்றடி மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம், அலகு காவடி எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
சீர்காழி:
சீர்காழி புற்றடி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் தை முதல் வெள்ளி அன்று கொடி ஏற்றப்பட்டு இரண்டாம் வெள்ளி அன்று தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கடந்த 15-ந் தேதி தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினமும் அம்மன் வீதி உலா நடந்தது. நேற்று தீமிதி திருவிழாவை முன்னிட்டு காலை சட்டநாதர் கோவிலில் இருந்து திரளான பக்தர்கள் பால்குடம், அலகு காவடி, பறவை காவடி எடுத்து கொண்டு ஊர்வலமாக தெற்கு வீதி, மேலவீதி, வடக்கு வீதி, கீழ் வீதி வழியாக சென்று கோவிலை அடைந்தனர். தொடர்ந்து நேற்று இரவு கோவிலின் முன்பு அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் திரளான பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் இரவு அம்மன் சிம்ம வாகனத்தில் வீதி உலா நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் போலீசார் ஈடுபட்டனர்.