பக்தர்கள் பறவை காவடி எடுத்து நேர்த்திக்கடன்
கோத்தகிரி முத்து மாரியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் பறவை காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கோத்தகிரி
கோத்தகிரி டானிங்டன் பகுதியில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று இரவு ஆற்றங்கரையில் இருந்து அம்மனை அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று டானிங்டன் விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் பறவைக்காவடியில் தொங்கியவாறும், அலகு குத்தியும் ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அக்னி சட்டி ஏந்தியும் சென்றனர். இந்த ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று டானிங்டன் முத்துமாரியம்மன் கோவிலை அடைந்தது. அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை டானிங்டன் முத்துமாரியம்மன் கோவில் விழா கமிட்டியினர் செய்திருந்தனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாவிளக்கு பூஜை மற்றும் அன்னதான நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து அம்மனை ஆற்றங்கரையில் வழியனுப்பும் நிகழ்வு நடைபெறுகிறது.