நாகராஜா கோவிலில் குவிந்த பக்தர்கள்


தினத்தந்தி 18 Sept 2023 12:15 AM IST (Updated: 18 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

ஆவணி கடைசி ஞாயிற்றுக்கிழமையையொட்டி நேற்று நாகர்கோவில் நாகராஜா கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் நின்று நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபாடு செய்தனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

ஆவணி கடைசி ஞாயிற்றுக்கிழமையையொட்டி நேற்று நாகர்கோவில் நாகராஜா கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் நின்று நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபாடு செய்தனர்.

நாகராஜா கோவில்

தமிழகத்தில் உள்ள நாகதோஷ பரிகார தலமாக நாகர்கோவில் நாகராஜா கோவில் திகழ்கிறது. இந்த கோவிலில் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான ஆவணி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை மற்றும் அடுத்தடுத்து வந்த ஞாயிற்றுக்கிழமையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

இந்தநிலையில் நேற்று ஆவணி மாதத்தின் கடைசி நாள் மற்றும் கடைசி ஞாயிற்றுக்கிழமையாகும். இதையொட்டி அதிகாலையில் இருந்தே பக்தர்கள் கோவிலுக்கு வரத்தொடங்கினர். குமரி மாவட்டம் மட்டுமின்றி, வெளி மாவட்டப் பகுதிகளில் இருந்தும், கேரள மாநில பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். இதில் பலர் குடும்பம், குடும்பமாக வந்ததை காண முடிந்தது.

பால் ஊற்றி வழிபாடு

கூட்ட நெரிசலை ஒழுங்குப்படுத்த தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டிருந்தது. இதில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்தபடி நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றியும், மஞ்சள் பொடி தூவியும் வழிபட்டனர்.

பக்தர்களின் வரிசை கோவிலின் உட்புறத்தில் இருந்து கோவிலுக்கு வெளியே வரை நின்றது. கூட்டம் அலைமோதியதால் நேற்று மதியம் நடையை சாத்த காலதாமதம் ஆனது.

அன்னதானம்

கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு குமரி மாவட்ட பொதுப்பணித்துறை சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

அதே சமயத்தில் கூட்ட நெரிசலை பயன்டுத்தி பக்தர்களிடம் திருட்டு உள்ளிட்ட அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் பக்தர்கள் வந்த வாகனங்கள் கோவில் வளாகத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. நாகராஜா கோவில் திடலில் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


Next Story