பழனி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள்: 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம்


பழனி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள்:  2 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
x

வார விடுமுறையையொட்டி பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

திண்டுக்கல்


பழனி முருகன் கோவில்


தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். வாரவிடுமுறை, மாத கிருத்திகை, சஷ்டி உள்ளிட்ட விசேஷ நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்கின்றனர்.


இந்நிலையில் இன்று வார விடுமுறை என்பதால், பழனியில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக ஓணம் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளதால், கேரளாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் நேற்று முன்தினமே பழனி பகுதியில் உள்ள தங்கும்விடுதிகளில் அறை எடுத்து தங்கினர். நேற்று அதிகாலையிலேயே பழனி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.


2 மணி நேரம் காத்திருந்து...


இதனால் மலைக்கோவில், அடிவாரம், பாதவிநாயகர் கோவில், சன்னதிவீதி, திருஆவினன்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பக்தர்கள் குவிந்தனர். கோவிலில் உள்ள தரிசன வழிகள், அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்லும் படிப்பாதை, யானைப்பாதை வழிகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. மேலும் மின்இழுவை ரெயில், ரோப்கார் ஆகிய நிலையங்களிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து சென்றனர். கூட்டம் காரணமாக கோவிலில் 2 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.


வாகன நிறுத்தமாகிய கிரிவீதி


வெளியூரில் இருந்து பழனிக்கு வரும் பக்தர்கள், தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு கிழக்கு கிரிவீதியில் சுற்றுலா பஸ்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் பலர் வாகனங்களை கிரிவீதிகளில் நிறுத்தி செல்கின்றனர். இதனால் சாமி தரிசனம் முடித்துவிட்டு கிரிவலம் வரும் பக்தர்களுக்கு பெரும் இடையூறாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், கிரிவீதிகளில் வாகனம் நிறுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Next Story