தைப்பூசத்தையொட்டி பக்தர்கள் குவிந்தனர்: திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் காவடி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நேற்று தைப்பூசத்தையொட்டி பக்தர்கள் குவிந்தனர். பறவை காவடி, பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினா்
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நேற்று தைப்பூசத்தையொட்டி பக்தர்கள் குவிந்தனர். பறவை காவடி, பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினா்
தைப்பூசவிழா
முருகப்பெருமான் குடிகொண்டு அருள் ஆட்சி புரியும் அறுபடை வீடுகளின் முதல்படை வீடு கொண்ட திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் மலை அடிவாரத்தில் பழனியாண்டவர் கோவில் உள்ளது. கோவிலின் துணை கோவிலான பழனியாண்டவர் கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல நேற்று முன்தினம் பழனியாண்டவர் கோவிலில் பழனி ஆண்டவருக்கு பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம் நடைபெற்றது.
நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் சர்வ அலங்காரத்தில் பல்லக்கில் சுப்பிரமணியசாமி தெய்வானையும், தந்த தொட்டியில், முத்துக்குமாரசாமி தெய்வானையுமாக எழுந்தருளி அருள்பாலித்தனர்.
பறவை காவடி
தைப்பூச விழா முடிந்த நிலையில் நேற்று பூச நட்சத்திரம் மாலை 3 மணிவரை இருந்ததால் பக்தர்கள் குடும்பத்துடன் கூட்டம், கூட்டமாக கோவிலில் குவிந்தனர். இதனால் கோவிலுக்குள்ளும், கோவிலின் வெளியிலுமாக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சில பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா... வீரவேல் முருகனுக்கு அரோகரா... என பக்தி கோஷங்கள் எழுப்பியபடி பயபக்தியுடன் காவடிகள், பால்குடங்கள் சுமந்து 3 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட கிரிவல பாதையை சுற்றி வந்து நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.
மேலும் சில பக்தர்கள் 7 அடி, 10 அடி நீளமுள்ள அலகு குத்தியும் வந்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினார்கள்.
மதுரையில் இருந்து ஒரு பறவை காவடியில் 5 பக்தர்கள் தொங்கியபடி வந்தனர். அதிலும் ஒரு பக்தர் உட்கார்ந்த நிலையில் கை குழந்தையை சுமந்தபடி வந்தார். நேற்று பவுர்ணமி என்பதால் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.