பழனியில் மயில் காவடிகளுடன் பக்தர்கள் குவிந்தனர்


பழனியில் மயில் காவடிகளுடன் பக்தர்கள் குவிந்தனர்
x
தினத்தந்தி 7 Feb 2023 12:30 AM IST (Updated: 7 Feb 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

பழனியில் தைப்பூச திருவிழா 9-ம் நாளையொட்டி மயில் காவடியுடன் பக்தர்கள் வந்து குவிந்தனர்.

திண்டுக்கல்

பழனி முருகன் கோவிலில் நடைபெறும் தைப்பூச திருவிழா பாதயாத்திரைக்கு பெயர் பெற்றதாகும். திருவிழாவை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக பழனிக்கு வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அதன்படி கடந்த 29-ந்தேதி பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து பழனிக்கு பாதயாத்திரை பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.

விழாவின் சிகர நிகழ்ச்சிகளான திருக்கல்யாணம், தேரோட்டம் முறையே கடந்த 3, 4-ந்தேதிகளில் நடைபெற்றது. அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் பழனியில் சாமி தரிசனம் செய்தனர். விழாவில் 9-ம் நாளான நேற்று காரைக்குடி பகுதியை சேர்ந்த நகரத்தார் காவடிக்குழுவினர் பழனி முருகன் கோவிலுக்கு மயில்காவடிகளுடன் சென்று சாமி தரிசனம் செய்தனர்.

முன்னதாக அவர்கள் பழனி ஆவணி மூலவீதியில் உள்ள நகரத்தார் மடத்தில் இருந்து மயில்காவடிகள், தீர்த்தக்குடம் எடுத்து கடைவீதி, திண்டுக்கல் சாலை, அடிவாரம் ரோடு, சன்னதிவீதி வழியாக மலைக்கோவில் சென்றனர். பின்னர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

திருவிழாவின் நிறைவு நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) தெப்பத்தேர் உற்சவம் நடைபெறுகிறது. இதில் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானையுடன் தெப்பத்தேரில் எழுந்தருளி அருள்பாலிப்பார். விழா ஏற்பாடுளை பழனி கோவில் இணை ஆணையர் நடராஜன் தலைமையிலான அலுவலர்கள் செய்து வருகின்றனர்.


Next Story