கள்ளழகர் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்


கள்ளழகர் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்
x
தினத்தந்தி 15 Aug 2022 1:18 AM IST (Updated: 15 Aug 2022 2:09 AM IST)
t-max-icont-min-icon

கள்ளழகர் கோவில் ஆடி திருவிழா உற்சவ சாந்தியுடன் நிறைவு பெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.

மதுரை

அழகர்கோவில்,

அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றானது ஆடிப்பெருந்திருவிழாவாகும். கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு திருவிழா நடந்துள்ளது.

கடந்த மாதம் 28-ந் தேதி ஆடி அமாவாசையும், இந்த மாதம் 3-ந் தேதி ஆடி 18-ம் பெருக்கு விழாவும், 4-ந் தேதி கொடி ஏற்றத்துடன் திருவிழா தொடங்கியது. மேலும் தினமும் அன்னம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் கள்ளழகர் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

பக்தர்கள் குவிந்தனர்

இதை தொடர்ந்து கடந்த 12-ந் தேதி திருத்தேரோட்ட திருவிழாவும் நடந்தது. பின்னர் நேற்று 14-ந் தேதி உற்சவ சாந்தியுடன் ஆடி திருவிழா நிறைவு பெற்றது. இதில் பதினெட்டாம் படி கருப்பணசாமி, மூலவர் சுந்தரராஜ பெருமாள் சன்னதியிலும் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று நெய் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர். இத்துடன் ஆடி திருவிழா நிறைவு பெற்றது.

மேலும் நேற்று விடுமுறை நாள் என்பதால் அழகர் மலை உச்சியில் உள்ள நூபுர கங்கையில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி அங்குள்ள ராக்காயி அம்மனை தரிசனம் செய்தனர். ஆறாவது படைவீடு சோலைமலை முருகன் கோவிலிலும், வள்ளி தெய்வானை சுப்பிரமணிய சுவாமிக்கும், வித்தகவிநாயகருக்கும் விசேஷ பூஜைகள் நடந்தது.

இங்கும் பக்தர்கள் குவிந்து விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.


Related Tags :
Next Story