ராமேசுவரம் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்


ராமேசுவரம் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்
x
தினத்தந்தி 15 May 2023 12:15 AM IST (Updated: 15 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோடை விடுமுறையையொட்டி ராமேசுவரம் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

கோடை விடுமுறையையொட்டி ராமேசுவரம் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.

கோடை விடுமுறை

தமிழகம் முழுவதும் கடந்த மாதம் 28-ந் தேதி முதல் அனைத்து பள்ளிகளிலும் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதுகின்றது.

இந்த நிலையில் கோடை விடுமுறையை தொடர்ந்து புனித தலமான ராமேசுவரம் கோவிலிலும் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாகவே பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக விடுமுறை நாளான நேற்று வழக்கத்தை விட பக்தர்களின் கூட்டம் மிக அதிகமாக இருந்தது.

இவ்வாறு வந்த பக்தர்கள் அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடிவிட்டு கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் புனித நீராடுவதற்கும் நீண்ட வரிசையில் நின்று புனித நீராடினர்.

தொடர்ந்து சாமி தரிசனம் செய்ய சாமி சன்னதி பிரகாரத்தில் இருந்து மூன்றாம் பிரகாரம் வரையிலும் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து சென்றனர்.

தனுஷ்கோடி

இதே போல் தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற்கரை பகுதியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. அரிச்சல்முனை கடற்கரை சாலை வளைவில் நின்றபடி 2 கடல் சேரும் இடத்தை பார்த்து ரசித்தனர்.

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளதால் ராமேசுவரம் பகுதியில் கடந்த 2 நாட்களாகவே மேற்கு ரத வீதி சாலையில் இருந்து சீதா தீர்த்தம் வரையிலும் கடும் போக்குவரத்து நெருக்கடி இருந்து வருகின்றது. இதனால் வாகனங்கள் ஊர்ந்தபடியே செல்கின்றன. குறிப்பாக நடுத்தெரு சாலையின் இருபுறமும் வாகனங்களை நிறுத்திவிட்டு சென்று விடுவதால் போக்குவரத்து நெருக்கடிக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகின்றது.

ஆகவே கோடை விடுமுறை முடிவடையும் வரை மேற்கு வாசல் முதல் திட்டக்குடி வரையிலான சாலை பகுதியில் வாகனங்களை நிறுத்தாமல் இருக்க போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story