அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம்
குடும்பம், குடும்பமாக வந்து அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.
விசேஷ நாட்களில் திருவண்ணாமலை நகரமே பக்தர்கள் வெள்ளத்தில் மூழ்கியிருக்கும். இதுதவிர விடுமுறை நாட்களிலும் ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்து அருணாசலேஸ்வரரை சாமி தரிசனம் செய்வார்கள்.
தற்போது கோடை விடுமுறை என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் குடும்பம், குடும்பமாக கோவிலுக்கு வருகை தருகின்றனர்.
அதன்படி இன்று ஏராளமான பக்தர்கள் கோவிலில் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். அவர்கள் கோவில் வளாகத்தில் ஆங்காங்கே அமர்ந்திருந்தனர்.
திருவண்ணாமலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கோவில் வளாகத்தில் தென்னை நார் விரிப்புகள் விரிக்கப்பட்டுள்ளன. அந்த விரிப்புகளும் சூடானதால் கோவில் நிர்வாகம் சார்பில் அதில் தண்ணீரை ஊற்றி குளிர்விக்கப்பட்டது.
மேலும் பக்தர்கள் பலர் வெயிலையும் பொருட்படுத்தாது 14 கிலோ மீட்டர் தூரம் தீபமலையை சுற்றி கிரிவலம் சென்றனர்.