நாகராஜா கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்


ஆவணி கடைசி ஞாயிற்றுக்கிழமையையொட்டி நேற்று நாகர்கோவில் நாகராஜா கோவிலில் நீண்டவரிசையில் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபட்டனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

ஆவணி கடைசி ஞாயிற்றுக்கிழமையையொட்டி நேற்று நாகர்கோவில் நாகராஜா கோவிலில் நீண்டவரிசையில் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபட்டனர்.

பக்தர்கள் கூட்டம்

தமிழகத்தில் உள்ள நாகதோஷ பரிகார தலங்களில் ஒன்றாகவும், குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகவும் நாகர்கோவில் நாகராஜா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அளவுக்கதிகமாக இருப்பது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான ஆவணி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையான 21-ந்தேதியில் இருந்து பக்தர்கள் கூட்டம் அளவுக்கதிகமாக இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று ஆவணி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை ஆகும். இதையொட்டி நேற்று அதிகாலையில் இருந்தே பக்தர்கள் கோவிலுக்கு வரத்தொடங்கினர். குமரி மாவட்டம் மட்டுமின்றி, வெளி மாவட்டங்களில் இருந்தும், கேரள மாநில பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்தனர். பலர் குடும்பம், குடும்பமாக வந்தனர். நேரம் ஆக, ஆக பக்தர்கள் கூட்டம் அளவுக்கு அதிகமாக இருந்தது.

திருவிழா கடைகள்

இதனால் நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபடும் இடத்திலும், கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்கும் ஆண்கள், பெண்கள் என பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். நாகர்சிலைகளுக்கு ஆண்களும், பெண்களும் பால் ஊற்றி, மஞ்சள் பொடி இட்டு வழிபட்டனர். இதனால் பக்தர்களின் வரிசை கோவிலின் உட்புறத்தில் இருந்து கோவிலுக்கு வெளியே பல மீட்டர் தூரம் வரை இருந்தது. ஏராளமானோர் சிறப்பு டிக்கெட்டுகளையும் பெற்று வழிபாடுகளில் பங்கேற்றனர். அளவுக்கதிகமான கூட்டம் இருந்ததால் நேற்று மதியம் நடைசாத்துவதற்கு காலதாமதம் ஆனது.

கூட்ட நெரிசலைப் பயன்டுத்தி பக்தர்களிடம் சமூக விரோதிகள் திருட்டு உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. சாதாரண உடையிலும் போலீசார் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டனர்.

பக்தர்கள் வந்த வாகனங்கள் கோவில் வளாகத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. வாகனங்களை நாகராஜா கோவில் திடலில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நாகராஜா திடல் பகுதிகளில் ஏராளமான திருவிழா கடைகளும் அமைக்கப்பட்டு இருந்தன.

அன்னதானம்

கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு குமரி மாவட்ட பொதுப்பணித்துறை கட்டிடம் மற்றும் நீர்வள ஆதார அமைப்பு ஆகியவற்றின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

அன்னதானத்தை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள் வசந்தி (நீர்வள ஆதார அமைப்பு), தம்பிரான் தோழன் (கட்டிடம்) ஆகியோர் தொடங்கி வைத்தனர். உதவி செயற்பொறியாளர் கிங்ஸ்லி, உதவி பொறியாளர் வில்சன்போஸ், வரைவுத் தொழில் அதிகாரி சதாசிவம், கண்காணிப்பாளர்கள் வில்பர்ட், பிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story