பூசாரியிடம் சாட்டையடி வாங்கிய பக்தர்கள்
வடமதுரை அருகே கோவில் பூசாரி பக்தர்கள் அனைவரையும் சாட்டையால் அடித்து ஆசி வழங்கினார்.
வடமதுரை அருகே பாடியூர் இ.புதூரில் உள்ள பெரியகாண்டியம்மன், அஜ்ஜப்பன், மகாமுனி கோவில்களில் ஆடித்திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. இதையொட்டி அம்மன் கரகம் பாலித்து தேவராட்டம், குதிரையாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன் மின் ரதத்தில் வீதி உலா நடைபெற்றது. மாலை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அம்மன் சிலையை ஆற்றில் கரைத்தனர். நேற்று பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி அம்மனின் உற்சவ சிலை மற்றும் ஆணி அடித்த காலணியை ஊர்வலமாக கோவிலுக்கு பக்தர்கள் எடுத்து வந்தனர். விரதம் இருந்த ஆண்கள் மற்றும் பெண்கள் உள்பட 40-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவில் முன்பு வட்டமாக அமர்ந்தனர். அதன்பின்னர் கோவில் பூசாரி பழனிச்சாமி ஆணி அடித்த காலணியை அணிந்து கொண்டு பக்தர்களை சுற்றி நடந்து வந்தார். அதனைத்தொடர்ந்து அம்மனை வழிபாடு செய்து கோவில் முன்பாக உட்கார்ந்திருந்த பக்தர்களின் தலையில் ஒவ்வொரு தேங்காயாக உடைத்தார். அதன்பின்னர் கோவில் பூசாரி பக்தர்கள் அனைவரையும் சாட்டையால் அடித்து ஆசி வழங்கினார். பூசாரியிடம் சாட்டையடி பெற்ற பக்தர்கள் கோவிலுக்குள் சென்று அம்மனை வழிபாடு செய்தனர். இந்த சிறப்பு வழிபாட்டில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.