மேலூர் அருகே நரசிங்கம்பட்டியில் மணல் மலையில் கார்த்திகை விழா கொண்டாடிய பக்தர்கள்-மணலை அள்ளிப்போட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்


மேலூர் அருகே நரசிங்கம்பட்டியில் மணல் மலையில் பக்தர்கள் கார்த்திகை விழா கொண்டாடினார்கள். பக்தர்கள் மணலை அள்ளிப்போட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மதுரை

மேலூர்,

மேலூர் அருகே நரசிங்கம்பட்டியில் மணல் மலையில் பக்தர்கள் கார்த்திகை விழா கொண்டாடினார்கள். பக்தர்கள் மணலை அள்ளிப்போட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மலைக்கோவில்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே நரசிங்கம்பட்டி பெருமாள் மலை அடிவாரத்தில் மலைக்கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் கார்த்திகை திருவிழா கொண்டாடப்படுகிறது.

நேற்று நடைபெற்ற கார்த்திகை திருவிழாவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குடும்பத்தினருடன் வந்திருந்தனர். இந்த கோவிலில் சாமிக்கு உருவ வழிபாடு இல்லை. பெருமாள் நின்று அவதரித்த படிக்கட்டுகளையே மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

பக்தர்கள் உருவாக்கிய மணல் மலை

கோவில் முன்பு சேங்கை எனப்படும் தீர்த்தகுளம் உள்ளது. இந்த குளத்தில் தீர்த்தமாடி விட்டு அந்த சேங்கை குளத்து மணலை கையினால் அள்ளிகொண்டு போய் கோவில் அருகே குறிப்பிட்ட ஒரு இடத்தில் போடுவார்கள். இதனை சேங்கை வெட்டுதல் என அழைக்கப்படுகிறது. அவ்வாறாக மூன்று தடவை செய்தால் நினைத்தது நிறைவேறும், விவசாயம் செழிக்கும் என்பதும் இப்பகுதி மக்களின் ஐதீகம்.

இதன்படி பல நூறு ஆண்டுகளாக இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் போட்ட மணல் தற்போது 50 அடி உயரத்துக்கும் மேலாக பெரிய நிரந்தரமாக மணல் மலையாகவே அமைந்துவிட்டது.

இந்த மணல் மலை, மழை பெய்தாலும், வெள்ளம் வந்த போதிலும் சிறிதும் பாதிப்படையாமல் இருப்பது பக்தியின் வெளிப்பாடு ஆகும்.

ஜோதி தீபம்

இத்தகைய சிறப்பு பெற்ற பெருமாள் மலை மீது கொண்டைக்கல் என்னுமிடத்தில் நேற்று மாலை 6 மணி அளவில் ஜோதி தீபம் ஏற்றப்பட்டது.அதன் பின்னரே பெருமாள் மலை சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள வீடுகளில் கார்த்திகை விளக்குகள் ஏற்றினர்.

மேலூர் பகுதியில் விவசாயிகள் பயிரிடும் பொங்கல் கரும்புகளை முதலாவதாக அறுவடை செய்து இந்த கோவிலில் வந்து விற்பனை செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. பக்தர்கள் இந்த கரும்புகளை கோவில் பிரசாதமாக போட்டி போட்டு வாங்கி செல்வது வழக்கமாகும். நேற்று கரும்பு விற்பனை அதிகமாக இருந்தது. ஒரு கரும்பு 20 ரூபாய்க்கு விற்பனையானது.

சிறப்பு பஸ்கள்

விழாவையொட்டி பக்தர்களின் வசதிக்காக மேலூரில் இருந்து அதிகளவு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டன. இதே போன்று மேலூர் அருகே மேலவளவில் உள்ள கருப்பு கோவில், வெள்ளிமலைப்பட்டி, அரிட்டாபட்டி, உறங்கான்பட்டி புலிமலைபட்டி, இடையபட்டி ஆகிய ஊர்களில் முருகன் கோவில்களில் கார்த்திகை திருவிழாக்கள் நடைபெற்றன. அப்பகுதியில் உள்ள மலைகளை சுற்றி வழிபாடுகளும் நடைபெற்றன. விழாவை முன்னிட்டு நாடகங்கள், மாட்டுவண்டி பந்தயங்களும் பல கிராமங்களில் நடைபெற்றன.


Next Story