திருவண்ணாமலையில் காலை முதலே கிரிவலம் சென்ற பக்தர்கள்..!
இந்த மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் திருவண்ணாமலையில் இன்று காலை தொடங்கியது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
மேலும் திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிப்படுவதால் பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து கோவிலின் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்வார்கள்.
மாதந்தோறும் வரும் பவுர்ணமி மட்டுமின்றி முக்கிய விசேஷ நாட்களிலும் பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இந்த மாதத்திற்கான பவுர்ணமி 11-ந் தேதி இன்று (வியாழக்கிழமை) காலை 10.16 மணிக்கு தொடங்கி நாளை (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு நிறைவடைகிறது.
இன்று காலை பவுர்ணமி தொடங்கியதால் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர். இதனால் கிரிவல பாதை முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பியுள்ளது. நேரம் செல்ல செல்ல பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
பவுர்ணமியை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது.