பழனி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள்
வார விடுமுறையையொட்டி பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
முருகப்பெருமானின் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்யவும், முடிக்காணிக்கை செலுத்தவும் தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக விசேஷ நாட்கள், விடுமுறை நாட்களில் பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்படுவது வழக்கம்.
அதன்படி வார விடுமுறையையொட்டி நேற்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் பழனி முருகன் கோவிலுக்கு படையெடுத்து வந்தனர். மலைக்கோவில், அடிவாரம் திருஆவினன்குடி கோவில், பாதவிநாயகர் கோவில் உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஏராளமான பக்தர்கள் முடிக்காணிக்கை செலுத்தியதால், முடிக்காணிக்கை நிலையத்திலும் கூட்டம் அதிகமாக இருந்தது.
இதுதவிர நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள், பக்தி பரவசத்துடன் படிப்பாதை வழியாக ஏறி மலைக்கோவிலுக்கு சென்றனர். மேலும் கோவிலின் தரிசன வழிகள், அடிவாரத்தில் இருந்து கோவிலுக்கு செல்லும் படிப்பாதை, ரோப்கார், மின்இழுவை ரெயில் ஆகிய பாதைகளிலும் கூட்டம் அதிகம் காணப்பட்டது. இதனால் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.