தேவாலா, சிங்காரா வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ -பதுக்கி வைத்திருந்த வெடி பொருட்கள் வெடித்து சிதறியதால் பரபரப்பு
தேவாலா, சிங்காரா வனப்பகுதியில் பயங்கர காட்டு தீ பரவியது. இதில் 50 -க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவிலான புல்வெளிகள் தீயில் கருகியது. மேலும் வனத்தில் பதுக்கி வைத்திருந்த வெடிபொருட்கள் வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கூடலூர்
தேவாலா, சிங்காரா வனப்பகுதியில் பயங்கர காட்டு தீ பரவியது. இதில் 50 -க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவிலான புல்வெளிகள் தீயில் கருகியது. மேலும் வனத்தில் பதுக்கி வைத்திருந்த வெடிபொருட்கள் வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வறட்சியான காலநிலை
கூடலூர், முதுமலை, மசினகுடி பகுதியில் அடர்ந்த வனங்கள் உள்ளது. காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளும் வசித்து வருகிறது. ஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி நவம்பர் மாதம் வரை தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இக்காலகட்டத்தில் வனப்பகுதி பசுமையாக காணப்படும்.
அதன் பின்னர் பனிப்பொழிவு மற்றும் கோடை காலம் தொடங்கி விடுவதால் வனம் படிப்படியாக பசுமை இழந்து காணப்படுவது வழக்கம். தற்போது வறட்சியான காலநிலை நிலவுவதால் வனப்பகுதியில் உள்ள பசும்புற்கள் காய்ந்து காணப்படுகிறது. இதை பயன்படுத்தி ஆசாமிகள் சிலர் வனப்பகுதிக்கு தீ வைத்து விடுகின்றனர். இதனால் காட்டுத்தீ பரவி வனப்பகுதியில் உள்ள புல்வெளிகள் எரிந்து விடுகிறது.
பயங்கர காட்டுத்தீ
இந்த நிலையில் கூடலூர் தாலுகா தேவாலா அருகே பொன்னூர் வனப்பகுதியில் நேற்று பகல் 11 மணிக்கு பயங்கர காட்டுத்தீ பரவியது. தகவல் அறிந்த தேவாலா மற்றும் நாடுகாணி வனத்துறையினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்த முயன்றனர். ஆனால் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென பரவியது. இதனால் வனத்துறையினரால் தீயை அணைக்க முடியவில்லை.
தொடர்ந்து தீ வேகமாக பரவியவாறு இருந்தது. இந்த சமயத்தில் பலத்த சத்தத்துடன் வெடிபொருட்கள் வெடித்து சிதறியது. இதனால் தீ அணைக்கும் பணியில் ஈடுபட்ட வனத்துறையினர் தப்பித்து ஓடினர். இதனால் பரபரப்பு காணப்பட்டது. வனப்பகுதியில் பயங்கர வெடி சத்தம் கேட்ட தகவலை அறிந்த தேவாலா போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது வனத்துக்குள் பதுக்கி வைத்திருந்த சில ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்கள் காட்டு தீயால் வெடித்து சிதறியது தெரிய வந்தது.
50 ஏக்கரில் நாசம்
இதைத் தொடர்ந்து தீயில் கருகிய வெடிபொருட்களை போலீசார் கைப்பற்றி விசாரணைக்காக எடுத்துச் சென்றனர். இது குறித்து போலீசார் கூறும் போது, நாடுகாணி தேவாலா வனப்பகுதியில் சட்ட விரோதமாக தங்கத் துகள்கள் சேகரிக்கப்படுகிறது, இதற்காக வெடிபொருட்களை பதுக்க வைத்திருக்கலாம். இதனால் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தனர். இதனிடையே காட்டுத்தீ பரவி சுமார் 50 -க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவிலான புல்வெளிகள் நாசமானது.
இதேபோல் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட சிங்கார வனப்பகுதியில் நேற்று மதியம் 2 மணிக்கு பயங்கர காட்டுத்தீ பரவியது. தகவல் அறிந்த வனச்சரகர் ஜான் பீட்டர் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இது குறித்து வனத்துறையினர் கூறும் போது, கோடை வறட்சியை பயன்படுத்தி வனப்பகுதிக்கு தீ வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.