விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில்மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகலெக்டர் பழனி வழங்கினார்
விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரையை கலெக்டர் பழனி வழங்கினார்.
விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் குடற்புழு நீக்க சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கி மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரையை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
விழுப்புரம் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு 1 முதல் 19 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்க மருந்து (அல்பெண்டசோல்) அங்கன்வாடி மையங்கள், அரசு, அரசு சார்ந்த மற்றும் தனியார் பள்ளிகளில் வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் 1,781 அங்கன்வாடி மையங்களிலும், 1,641 பள்ளிகளிலும் படிக்கும் 1 முதல் 19 வயதுக்குட்பட்ட 6,80,747 குழந்தைகளுக்கும், 20 முதல் 30 வயதுக்குட்பட்ட 1,65,958 பெண்களுக்கும் என மொத்தம் 8,46,705 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படவுள்ளது.
சிறப்பு முகாம்
மேலும் பள்ளி செல்லா குழந்தைகளுக்கும் அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படும். இதில் 1 முதல் 2 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு 200 மில்லிகிராம் கொண்ட அல்பெண்ட்சோல் மாத்திரையும் 2 முதல் 19 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு 400 மில்லிகிராம் கொண்ட மாத்திரையும் வழங்கப்படும். இப்பணியில் பொது சுகாதாரத்துறை, பள்ளிக்கல்வித்துதுறை மற்றும் ஊட்டச்சத்துத்துறையை சேர்ந்த 3,357 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்காமல் விடுபட்ட குழந்தைகளுக்கு 21-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று வழங்கப்படும்.
ரத்தசோகை தடுக்கப்படுகிறது
தமிழ்நாடு அரசு உத்தரவின்படி நடைபெற்று கொண்டிருக்கும் இச்சிறப்பு முகாம்களில் வழங்கப்படும் குடற்புழு நீக்க மாத்திரையை உட்கொள்வதன் மூலம், தங்கள் உடலில் உள்ள குடற்புழுக்கள் முற்றிலுமாக அழிக்கப்படும். இதன் மூலம் நீங்கள் உண்ணும் உணவின் மூலம் கிடைக்கப்பெறக்கூடிய முழு ஊட்டச்சத்தும் முழுவதுமாக கிடைக்கப்பெறும்.
உடல் வலுவும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ரத்தசோகை வராமல் தடுக்கப்படுகிறது. நோய் தடுப்பு சக்தியை அதிகரித்து சுறுசுறுப்பாக இருக்க உதவுவதுடன் அறிவுத்திறன் மற்றும் உடல் வளர்ச்சியை மேம்படுத்தவும், ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிறது. எனவே மாணவ-மாணவிகள் கட்டாயம் குடற்புழு நீக்க மாத்திரையை உட்கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து, கலெக்டர் தலைமையில் பள்ளி மாணவிகள், குடற்புழு நீக்கம் தொடர்பான உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) டாக்டர் பொற்கொடி, பள்ளி தலைமையாசிரியர் சசிகலா, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பிரியா பத்மாசினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.