சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு டி.ஜி.பி. பாராட்டு


சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு டி.ஜி.பி. பாராட்டு
x

அரியலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு டி.ஜி.பி. பாராட்டு தெரிவித்தார்.

அரியலூர்

தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று முன்தினம் திருச்சி வந்திருந்த நிலையில், அவர் திருச்சி மத்திய மண்டலத்தில் சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு பாராட்டு சான்றிதழை வழங்கி பாராட்டினார். இதில் அரியலூர் மாவட்டத்தில், தா.பழூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போதை பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்து, கஞ்சா மற்றும் பிற போதை பொருட்களை பறிமுதல் செய்தமைக்காக சப்-இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன், நீதிமன்ற அலுவலில் சிறப்பாக செயல்பட்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளில் குற்றவாளிகள் தண்டனை பெறுவதற்கு விரைவாக பணிபுரிந்தமைக்காக ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் முதல் நிலை பெண் போலீஸ் வனிதா, கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து 4 முக்கிய வழக்குகளில் குற்றவாளிகளை பிடிப்பதற்கு உதவி புரிந்தமைக்காக செந்துறை போலீஸ்காரர் செந்தில் முருகன், மீன்சுருட்டி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற திருட்டு வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க தகவல் சேகரித்து சிறப்பாக செயல்பட்டமைக்காக போலீஸ்காரர் பிரபாகரன் ஆகியோரது பணிகளை பாராட்டியும், அவர்களை மென்மேலும் சிறப்பாக பணிபுரிய போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு பாராட்டு சான்றிதழை வழங்கி பாராட்டினார். அப்போது திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி.கார்த்திகேயன், திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. சரவணசுந்தர் மற்றும் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story