பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு; காந்திகிராம பல்கலைக்கழகத்தில் கூடுதல் டி.ஜி.பி. ஆய்வு
பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பதையொட்டி, காந்திகிராம பல்கலைக்கழகத்தில் கூடுதல் டி.ஜி.பி. ஆய்வு செய்தார்.
பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பதையொட்டி, காந்திகிராம பல்கலைக்கழகத்தில் கூடுதல் டி.ஜி.பி. ஆய்வு செய்தார்.
பட்டமளிப்பு விழா
திண்டுக்கல் அருகே உள்ள காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழா மற்றும் காந்திகிராம நிறுவனத்தின் பவளவிழா, வருகிற 11-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறுகிறது.
இந்த விழாவில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு 2018-19, 2019-20 கல்வி ஆண்டுகளில் படித்த மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசுகிறார். மேலும் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரி எல்.முருகன் ஆகியோரும் பங்கேற்கிறார்கள்.
சாலை புதுப்பிக்கும் பணி
பிரதமர் மோடி வருகையையொட்டி, பல்கலைக்கழக வளாகத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்திறங்கும் பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் காந்திகிராம பல்கலைக்கழகத்துக்கு வருகிறார். இதனையடுத்து திணடுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலை மற்றும் காந்திகிராம பிரிவில் இருந்து பல்கலைக்கழகம் வரை சாலை புதுப்பிக்கும் பணி இரவு, பகலாக நடைபெற்று வருகிறது.
விழா நடைபெறுகிற பல்கலைக்கழக பல்நோக்கு அரங்கம் பிரம்மாண்டமாக நவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணியில் 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கூடுதல் டி.ஜி.பி. ஆய்வு
இதற்கிடையே பல்கலைக்கழக வளாகம் முழுவதும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அவ்வப்போது வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. நுண்ணறிவு போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். சிறப்பு பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் தீவிர சோதனைக்கு பிறகே பல்கலைக்கழகத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இந்தநிலையில் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பாதுகாப்பு பணியை ஆய்வு செய்ய கூடுதல் டி.ஜி.பி. (சட்டம்-ஒழுங்கு) தாமரைக்கண்ணன் இன்று பல்கலைக்கழகத்துக்கு வந்தார். ஹெலிபேடு, பல்கலைக்கழக வளாகம், விழா அரங்கம் உள்ளிட்ட இடங்களை நேரில் பார்வையிட்டு அவர் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது தென்மண்டல ஐ.ஜி. அஸ்ராகார்க், மதுரை சரக டி.ஐ.ஜி. பொன்னி, போலீஸ் சூப்பிரண்டுகள் பாஸ்கரன் (திண்டுக்கல்), பிரவீன் உமேஷ் டோங்கரே (தேனி) ஆகியோர் உடனிருந்தனர்.
கலெக்டர் ஆலோசனை
இதேபோல் கலெக்டர் விசாகன் தலைமையிலான வருவாய்த்துறையினர் பல்கலைக்கழகத்துக்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் பல்கலைக்கழக பதிவாளர் சிவக்குமாருடன் நிகழ்ச்சி குறித்து வருவாய்த்துறையினர் ஆலோசித்தனர்.
முன்னதாக காந்திகிராம பல்கலைக்கழகத்துக்கு பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன் வந்தார். ஹெலிபேடு, பட்டமளிப்பு விழா நடைபெறும் பல்நோக்கு அரங்கம் ஆகியவற்றை பார்வையிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், திண்டுக்கல் மாவட்டத்துக்கு முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடி வருகை தர உள்ளார். பிற்பகல் 3 மணிக்கு வருகை தரும் அவர், விழா முடிந்து மீண்டும் மாலை 5 மணி அளவில் மதுரைக்கு செல்கிறார். மதுரை விமானநிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார் என்றார்.