சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருக்கு ஆறுதல் தெரிவித்து டி.ஜி.பி. கடிதம்


சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருக்கு ஆறுதல் தெரிவித்து டி.ஜி.பி. கடிதம்
x
தினத்தந்தி 29 Sept 2022 12:15 AM IST (Updated: 29 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

விடுமுறை தர மறுத்ததால் மகளின் திருமண நிச்சயதார்த்தம் தடைபட்டதாக ஆடியோ வெளியிட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருக்கு ஆறுதல் தெரிவித்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு கடிதம் அனுப்பி உள்ளார்.

சிவகங்கை

விடுமுறை தர மறுத்ததால் மகளின் திருமண நிச்சயதார்த்தம் தடைபட்டதாக ஆடியோ வெளியிட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருக்கு ஆறுதல் தெரிவித்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு கடிதம் அனுப்பி உள்ளார்.

ஆடியோ வைரல்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர், தனது மகள் திருமணத்திற்கு பெண் பார்ப்பதற்கு மாப்பிள்ளை வீட்டார்கள் வர இருந்த நிலையில் பாதுகாப்பு பணிக்கு தன்னை அனுப்பியதால் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி தடைபட்டதாக வருத்தத்துடன் ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த சம்பவத்தை அறிந்த தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு அவருக்கு ஆறுதல் கூறி கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:-

மன வருத்தம்

தங்கள் மகளின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற இருந்ததும், அதில் கலந்து கொள்ள தங்களுக்கு விடுப்பு மறுக்கப்பட்டதும், காணொலி வாயிலாக அறிந்தேன். தங்கள் மகளின் நிச்சயதார்த்த நிகழ்ச்சி தடைபட்டதை அறிந்ததும் நான் மிகுந்த மனவருத்தம் அடைந்தேன்.

இதுபோன்ற முக்கிய குடும்ப நிகழ்வுகளில் காவல் அதிகாரிகள் விடுப்பு மறுக்கக்கூடாது என்பதை மேல் அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டு இருக்கிறது. வரும் நாட்களில் தங்கள் மகளின் நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடத்த ஏதுவாக போதுமான நாட்கள் விடுப்பு வழங்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.


Next Story