வேலூர் கால்நடைத்துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் தர்ணா
வேலை வாங்கி தருவதாக பண மோசடி: வேலூர் கால்நடைத்துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் தர்ணா
கால்நடைத்துறையில் பராமரிப்பு உதவியாளர் பணியிடங்களுக்காக நியமனம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது.
அப்போது கே.வி.குப்பத்தை அடுத்த கீழ்ஆலத்தூர் கால்நடை மருத்துவமனையில் உதவியாளராக பணியாற்றியவரும், தற்போது குடியாத்தம் கல்லூர் கால்நடை மருத்துவமனையில் உதவியாளராக பணிபுரிந்து வரும் பெண் ஒருவர்,
மாச்சனூர் கிராமத்தை சேர்ந்த சிவசந்திரன், பிரபுதேவா, ராகவேந்திரன் உள்பட 5 பேரிடம் கால்நடை துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை பெற்றுள்ளார். ஆனால் அவர்களுக்கு வேலை வாங்கி கொடுக்கவில்லை.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட 5 பேரும் அந்த துறையின் உயர்அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் அதன்பேரில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட 5 பேர் மற்றும் உறவினர் ஒருவர் வேலூரில் உள்ள கால்நடைதுறை இணை இயக்குனர் அலுவலக வளாகத்தில் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடி செய்த பெண் ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து தகவலறிந்த வேலூர் வடக்கு போலீசார் மற்றும் கால்நடைதுறை அதிகாரிகள் தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கும்படி தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.