நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் 2 குழந்தைகளுடன் இளம்பெண் தர்ணா; கணவர் அடித்து துன்புறுத்துவதாக குற்றச்சாட்டு
கணவர் அடித்து துன்புறுத்துவதால் பாதுகாப்பு கேட்டு, கலெக்டர் அலுவலக வளாகத்தில் 2 குழந்தைகளுடன் இளம்பெண் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
நாகர்கோவில்,
கணவர் அடித்து துன்புறுத்துவதால் பாதுகாப்பு கேட்டு, கலெக்டர் அலுவலக வளாகத்தில் 2 குழந்தைகளுடன் இளம்பெண் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
2 குழந்தைகளுடன் இளம்பெண் தர்ணா
நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் வாத்தியார்விளை பகுதியை சேர்ந்தவர் திவ்யா சுரேஷ் (வயது 24). இவர் நேற்று 2 குழந்தைகளுடன் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அவர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் 2 குழந்தைகளுடன் அமர்ந்து திடீரென தர்ணாவில் ஈடுபட்டார்.
மேலும் தனக்கும், தனது குழந்தைகளுக்கும் அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனக்கூறி கதறி அழுதார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் திவ்யா சுரேசை சமாதானம் செய்து, அவரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் கூறியதாவது:-
எனது சொந்த ஊர் நாகர்கோவில் ஆகும். நானும், கொட்டாரம் பகுதியை சேர்ந்த ஒருவரும் காதலித்து 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டோம். எங்களது திருமணம் இருவீட்டார் சம்மதத்தோடு நடைபெற்றது. எங்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.
கொலை மிரட்டல்
இந்த நிலையில் திருமணத்துக்கு பிறகு எனது கணவர் குடித்துவிட்டு வந்து என்னை அடித்து துன்புறுத்தி வருகிறார். மேலும் என் மீது சந்தேகப்படுவதாக கூறி தினமும் தகராறு செய்து வருகிறார். நான் வறுமையில் உள்ளதால் என்னுடைய 2 குழந்தைகளை உறவினர் ஒருவர் கவனித்து வருகிறார். எனது கணவரின் துன்புறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்தது. அத்துடன் எனக்கும், எனது குழந்தைகளுக்கும் கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். இது தொடர்பாக கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே எனக்கும், எனது குழந்தைகளுக்கும் உயிர் பாதுகாப்பு கேட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்துள்ளேன். மேலும் என்னையும் எனது குழந்தைகளையும் காப்பகத்தில் சேர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கண்ணீர் மல்க கூறினார்.
கலெக்டர் அலுவலகத்தில் மனு
இதையடுத்து திவ்யா சுரேஷிடம், கலெக்டர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட அனுமதி இல்லை என்றும் கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என்றும் போலீசார் கூறினர். அதைத்தொடர்ந்து திவ்யா சுரேஷ் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார். பாதுகாப்பு கேட்டு இளம்பெண் தனது 2 குழந்தைகளுடன் கலெக்டர் அலுவகத்தில் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.