தரையில் அமர்ந்து மகனுடன் பெண் தர்ணா


தரையில் அமர்ந்து மகனுடன் பெண் தர்ணா
x

கலெக்டர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து மகனுடன் பெண் தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர்

குறைதீர்வு கூட்டம்

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர். பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

ஒடுகத்தூர் அருகே உள்ள பெரிய ஏரியூரை சேர்ந்தவர் வேண்டாமணி. தனது மகனுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்திருந்த அவர் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெறும் அரங்கம் அருகே திடீரென தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதைப்பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அதிகாரிகளிடம் மனு அளிக்க அழைத்துச் சென்றனர். பின்னர் அவர் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனு குறித்து வேண்டாமணி கூறியதாவது:-

போலீசில் புகார்

எனது கணவர் பெயர் குமரனுக்கும், எனக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நான் தற்போது எனது அம்மா வீட்டில் வசித்து வருகிறேன். இந்த நிலையில் எனது கணவர் வேறு ஒரு பெண்ணுடன் வாழ்ந்து வருகிறார். விவகாரத்து பெறாமல் என்னை ஏமாற்றி உள்ளார். இதுதொடர்பாக வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தேன். ஆனால் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

குடியாத்தம் கிராமம் கே.வலசை கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

எங்களது கிராமத்தில் உள்ள மலையடிவாரத்தில் முனீஸ்வரன் கோவில் அமைந்துள்ளது. இங்கு நாங்கள் பல தலைமுறைகளாக வழிபாடு செய்து வருகிறோம். தற்போது கோவில் நிலம் தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் எங்களால் வழிபாடு செய்ய முடியவில்லை. எனவே கோவில் நிலம் தொடர்பாக உரிய முறையில் அளவீடு செய்து நிலம் எந்த வகைபாடு என தெரியப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இலவச வீட்டு மனைபட்டா

அணைக்கட்டு தாலுகா விரிஞ்சிபுரம், செதுவாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து வரும் 14 திருநங்கைகள் அளித்துள்ள மனுவில் நாங்கள் அணைக்கட்டு தாலுகாவில் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி பல முறை மனுக்கள் அளித்துள்ளோம். ஆனால் அதன் மீது நடவடிக்கை இல்லை. மூன்றாம் பாலினம் என்பதன் அடிப்படையில் முன்னுரிமை கொடுத்து எங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

வேலூர் கொசப்பேட்டை ஈ.வெ.ரா. அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் உதவி தலைமை ஆசிரியை புவனா அளித்துள்ள மனுவில் இப்பள்ளியின் தலைமை ஆசிரியையாக இருந்தவர் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து பொறுப்பு தலைமை ஆசிரியையாக நான் பணியாற்றி வந்தேன். பள்ளியின் வளர்ச்சிக்கு எனது பங்கினை முழுமையாக கொடுத்தேன். 10-ம் வகுப்பில் 91 சதவீதம், பிளஸ்1-ல் 91 சதவீதம், பிளஸ்-2 தேர்வில் 94 சதவீதம் மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். பள்ளிக்கு பல்வேறு நன்மைகளும் செய்தேன். இந்தநிலையில் திடீரென வேறு பள்ளியின் தலைமை ஆசிரியரை இந்தபள்ளிக்கு பொறுப்பு தலைமை ஆசிரியராக பணிசெய்ய உத்தரவிட்டுள்ளனர். என்னை அவமானப்படுத்தும் வகையில் செயல்பட்டுள்ளனர். எனவே என்னை மீண்டும் தலைமை ஆசிரியையாக நியமிக்க வேண்டும என்று கூறியிருந்தார்.

மாற்றுத்திறனாளிகள்

வேலூர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் சார்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவில் கலெக்டர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும் என்றால் பல கிலோ மீட்டர் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. மற்ற மாவட்டங்களில் கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே செயல்படுவது போன்று வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.


Next Story