டெக்ஸ்டைல் மார்க்கெட் கடை உரிமையாளர்கள் தர்ணா போராட்டம்
பாதுகாப்பு கேட்டு டெக்ஸ்டைல் மார்க்கெட் கடை உரிமையாளர்கள் திருப்பத்தூர் கலெக்டர்அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ண போராட்டம் நடத்தினர்.
பாதுகாப்பு கேட்டு டெக்ஸ்டைல் மார்க்கெட் கடை உரிமையாளர்கள் திருப்பத்தூர் கலெக்டர்அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ண போராட்டம் நடத்தினர்.
தர்ணா போராட்டம்
திருப்பத்தூர் டெக்ஸ்டைல் மார்க்கெட் சங்கத்தலைவர் அசோகன் மற்றும் கடை உரிமையாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் டெக்ஸ்டைல் மார்க்கெடில் புகுந்து எங்கள் கடைகளை காலி செய்யக்கோரி கொலை மிரட்டல் விடுக்கிறார்கள், அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.
அவர்களிடம், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி மனுவாக கலெக்டரிடம் கொடுங்கள் என கூறினர். அதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், பாதுகாப்பு கேட்டு கலெக்டர் அமர்குஷ்வாஹா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் ஆகியோரிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
மிரட்டுகிறார்கள்
திருப்பத்தூர் நகர வைசியர் சங்கத்துக்கு சொந்தமாக வணிக வளாகம் திருப்பத்தூர் பழைய பஸ் நிலையம் அருக உள்ளது. கடந்த 1993-ம் ஆண்டு திருப்பத்தூர் டெக்ஸ்டைல்ஸ் சங்கத்தினர் 35 ஆண்டுகளுக்கு குத்தகை எடுத்தனர். இந்த வணிக வளாகத்தில் 40-க்கும் அதிகமான கடைக்கள் இயங்கி வருகிறது. இதற்கான குத்தகை காலம் அடுத்த 6 ஆண்டுகள் வரை உள்ள நிலையில், தற்போது நகர வைசியர் சங்க நிர்வாகி ஒருவர் குத்தகைக்கான காலம் முடிவடைந்ததாக போலி பத்திரம் தயார் செய்து உடனடியாக காலி செய்ய வேண்டுமென எங்களை மிரட்டி வருகிறார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு நகர வைசியர் சங்க நிர்வாகியும், திருப்பத்தூர் நகர தி.மு.க. பிரமுகர் ஒருவரும் தனது ஆதர்வாளர்களுடன் திடீரென வணிக வளாகத்துக்குள் நுழைந்து, டெக்ஸ்டைல் உரிமையாளர்களை உடனடியாக அங்கிருந்து கடையை காலி செய்ய வேண்டும் என கூறி தகராறு செய்து, கொலை மிரட்டல் விடுத்தார். எனவே, அவர்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு, எங்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும்.
விசாரணை நடத்த உத்தரவு
முறைகேடாக குத்தகை பத்திரம் தயார் செய்த வைசியர் சங்க நிர்வாகி, தி.மு.க. பிரமுகர் மற்றும் அவருக்கு ஆதரவாக செயல்பட்ட சார் பதிவாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குத்தகை காலம் முடியும் வரை எங்களை அவர்கள் தொந்தரவு செய்யக்கூடாது என்ற உத்தரவை பிறப்பிக்கவேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளனர். மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டனர். கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென தரையில் அமர்ந்து போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.