அரசிராமணியில் கிராம மக்கள் தர்ணா போராட்டம்
திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரசிராமணி பேரூராட்சி அலுலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தேவூர்:
திடக்கழிவு மேலாண்மை
தேவூர் அருகே அரசிராமணி பேரூராட்சிக்கு உட்பட்ட 8-வது வார்டு பகுதியில் திடக்கழிவு மேலாண்மை கிடங்கு அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்காக அரசு புறம்போக்கு நிலத்தில் வருவாய் துறையினர் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம், கால்நடை மருத்துவம் ஆகியவை இருப்பதால் திடக்கழிவு மேலாண்மை கிடங்கு அமைக்க கூடாது என்று அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
ஆனாலும் திடக்கழிவு மேலாண்மை கிடங்கு அமைக்கும் பணியை பேரூராட்சி நிர்வாகம் தொடங்கியதாக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அரசிராமணி பேரூராட்சி அலுவலகத்தில் திரண்டனர்.
தர்ணா போராட்டம்
பின்னர் பேரூராட்சி தலைவர் காவேரியிடம், திடக்கழிவு மேலாண்மை கிடங்கு அமைக்க கூடாது என்று கூறி மனு கொடுத்தனர். அப்போது பேரூராட்சி தலைவருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகம் முன்பு திடீரென தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த தேவூர் போலீசார் விரைந்து வந்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்களை பாதிக்கும் எந்தவொரு திட்டமும் செயல்படுத்தபடாது என்று பேரூராட்சி தலைவர் காவேரி கூறினார். அதன்பிறகு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த போராட்டத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.