சான்றிதழை திருப்பி கேட்டு கரூர் தனியார் கல்லூரி முன்பு தர்ணா போராட்டம்
சான்றிதழை திருப்பி கேட்டு கரூர் தனியார் கல்லூரி முன்பு தர்ணா போராட்டம் நடந்தது. இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சான்றிதழ் தர மறுப்பு
கரூர் மாவட்டம், குளித்தலை பகுதிக்குட்பட்ட இனுங்கூரை சேர்ந்தவர் ராஜலிங்கம். இவரது மகன் ஜெகதீஷ் (வயது 18). இவர் நடந்து முடிந்த பிளஸ்-2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றார். இதனையடுத்து கரூர் புலியூர் செட்டிநாடு பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்வதற்காக தனது நண்பருடன் சேர்ந்து கடந்த ஜூலை மாதம் 26-ந்தேதி ரூ.5,500 செலுத்தி விண்ணப்பித்துள்ளார்.இதற்கிடையில் குளித்தலை அரசு கலைக்கல்லூரியில் சமீபத்தில் நடைபெற்ற கலந்தாய்வில் அந்த மாணவருக்கு அரசு கலைக்கல்லூரியில் சேர இடம் கிடைத்துள்ளது. எனவே பொறியியல் கல்லூரியில் சேர்க்கையின்போது மாணவர் கொடுத்த சான்றிதழ் மற்றும் முன்பணம் ரூ.5,500-யை திருப்பி தருமாறு கல்லூரி நிர்வாகத்திடம் ஜெகதீஷ் முறையிட்டுள்ளார். ஆனால் கல்லூரி நிர்வாகம் சான்றிதழை திருப்பி கொடுக்க மறுத்ததாக தெரிகிறது.
தர்ணா போராட்டம்
இதனையடுத்து தனது சான்றிதழ் மற்றும் முன்பண தொகையை உடனடியாக கல்லூரி நிர்வாகம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி செட்டிநாடு பொறியியல் கல்லூரி நுழைவாயில் முன்பு மாணவர் ஜெகதீஷ் மற்றும் அவரது தந்தை ராஜலிங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் குளித்தலை ஒன்றிய செயலாளர் முத்துசெல்வன், கரூர் மாநகர செயலாளர் தண்டபாணி, வாலிபர் சங்க மாவட்ட குழு உறுப்பினர் கணேசன் ஆகியோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பசுபதிபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கல்லூரி நிர்வாகத்திடம் பேசி சான்றிதழ் மற்றும் முன்பணத்தை பெற்று தருவதாக உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் சான்றிதழ் மற்றும் முன்பணத்தை கல்லூரி நிர்வாகத்திடம் இருந்து பெற்று மாணவர் ஜெகதீசிடம் வழங்கப்பட்டது. இந்த சம்பவம் புலியூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.