தனியார் நிதி நிறுவனத்தில் நகைக்கடன் பெற்றவர் குடும்பத்துடன் தர்ணா


தனியார் நிதி நிறுவனத்தில் நகைக்கடன் பெற்றவர் குடும்பத்துடன் தர்ணா
x

ஜோலார்பேட்டை பகுதியில் தனியார் நிதி நிறுவனத்தில் நகைக்கடன் பெற்றவர் குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் பகுதியில் தனியார் கோல்டு லோன் நிறுவனம் இயங்கி வருகிறது. இதில் ஜோலார்பேட்டை ஜெய மாதா நகர் பகுதியை சேர்ந்த இளங்கோ, அம்பிகா தம்பதி 15 ஆண்டுகளாக நகை அடமானம் வைத்து கடன் பெற்றுள்ளனர். தற்போது சுமார் 8½ பவுன் நகையை வைத்து கடன் பெற்று வந்துள்ளனர்.

இந்த நிலையில் நகைக்கடனுக்கு கடந்த மார்ச் மாதம் தவணைத்தொகையை கிளை மேலாளரிடம் செலுத்தி உள்ளனர். ஆனால் அதனை வரவு வைக்காமல் இளங்கோ, அம்பிகா தம்பதியின் நகையை கடந்த மாதம் 28-ந் தேதி எந்த முன்னறிவிப்பும் வாடிக்கையாளருக்கு தெரியப்படுத்தாமல் ஏலத்திற்கு விட்டுள்ளதாக தெரிகிறது.

இதனை அறியாத இளங்கோ மற்றும் அம்பிகா அசல் மற்றும் வட்டியை செலுத்த நேற்று வந்தனர். ஆனால் தாங்கள் வைத்த 68 கிராம் நகை அனைத்தும் ஏலத்திற்கு விடப்பட்டது என்றும், நகைகள் எல்லாம் உருக்கப்பட்டு விட்டது என்றும் கிளை மேலாளர் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் தனியார் கோல்டு லோன் நிறுவனத்தில் குடும்பத்துடன் தர்ணாவில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜோலார்பேட்டை போலீசார் தம்பதியினர் மற்றும் கிளை மேலாளரிடம் விசாரித்து வருகின்றனர்.


Next Story