சூரப்பள்ளம் ஊராட்சியில் தார்சாலை அமைக்கப்பட்டது
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி: சூரப்பள்ளம் ஊராட்சியில் தார்சாலை அமைக்கப்பட்டது
கரம்பயம்:
பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சூரப்பள்ளம் ஊராட்சியில் கீழத்தெரு, மேலத்தெரு ஆகிய 2 பகுதிகளிலும் ஏராளமானவர்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ளவர்கள் சாலைகள் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். சாலை அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கடந்த 3 மாதத்திற்கு முன்பு தார்சாலை அமைப்பதற்காக ஜல்லிகற்கள் கொட்டப்பட்டு அதற்கு மேல் செம்மண் போடப்பட்டது. ஆனால் தார்சாலை போடாமல் அப்படியே கிடந்தது. இதனால் ஜல்லிகற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக சாலை காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயமடைந்தனர். இதுகுறித்த செய்தி படத்துடன் 'தினத்தந்தி'யில் பிரசுரமானது. இதன் எதிரொலியாக கீழத்தெரு, மேலத்தெரு ஆகிய 2 பகுதிகளிலும் தார்சாலை அமைக்கப்பட்டது. செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும், உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.