தினகரன் - ஓபிஎஸ் சந்திப்பு: மாயமானும், மண் குதிரையும் - எடப்பாடி பழனிசாமி கிண்டல்
மாய மானும், மண் குதிரையும் ஒன்று சேர்ந்துள்ளது என ஓபிஎஸ், டிடிவி தினகரன் சந்திப்பு குறித்து ஈபிஎஸ் விமர்சனம் செய்துள்ளார்.
சேலம்,
அதிமுகவில் சமீப காலமாக தொடர்ந்து பிரச்சினைகள் நீடித்து வரும் நிலையில், பரபரப்பான அரசியல் சூழல் மத்தியில் டிடிவி தினகரனுடன் ஓபிஎஸ் சந்திப்பு மேற்கொண்டனர். இந்த சந்திப்பை தொடர்ந்து, ஓபிஎஸ் சசிகலாவை சந்திக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து அதிமுக தரப்பில் விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இந்தநிலையில்,
சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
ரூ.30,000 கோடி ஊழல் தொடர்பான ஆடியோ வெளியான நிலையில் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.நான் எந்த சொத்தும் இதுவரை வாங்கவில்லை, எந்த தொழிலும் நான் செய்யவில்லை, விவசாயம் மட்டுமே செய்து வருகிறேன். 1989ம் ஆண்டுக்கு பிறகு என் மீது எந்த சொத்தும் கிடையாது; நான் சொத்துக்கள் வாங்கியதே கிடையாது. திமுகவின் தூண்டுதலின் பேரில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தலைவர் ஆளும் கட்சி அல்ல அதிமுக, தொண்டர்கள் ஆளும் கட்சி.
ஜிரோவும் (ஓபிஎஸ்) ஜிரோவும் (டிடிவி தினகரன்) இணைந்தால் ஜீரோ தான். டிடிவி தினகரன் ஓபிஎஸ் சந்திப்பானது காலியான கூடாரத்தில் ஒட்டகம் புகுந்ததை போன்ற நிலை தான்.
டிடிவி தினகரன் ஓபிஎஸ் இணைந்தது மாயமானும், மண் குதிரையும் ஒன்று சேர்ந்தது போல் தான் உள்ளது.கிரிக்கெட் மட்டும் பார்க்காமல் சபரீசனையும் பார்த்தால் திமுகவின் பி டீம் ஓபிஎஸ் என உறுதியாகி உள்ளது. ஓபிஎஸ் உடன் இருந்த வைத்தியலிங்கம், மனோஜ்பாண்டியன் ஆகியோர் எங்கே போனார்கள்.
பண்ருட்டி ராமச்சந்திரன் ஒரு கிளைச்செயலாளர் பதவிக்கு கூட தகுதி இல்லாதவர். பண்ருட்டி ராமச்சந்திரன் எந்த கட்சிக்கும் விஸ்வாசமாக இருந்தது இல்லை என்றார்.