ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சோதனை முயற்சியாக பயிரிடப்பட்ட தூலிப்ஸ்மலர்கள்
சோதனை முயற்சியாக ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் தூலிப்ஸ் மலர் செடிகள் பயிரிடப்பட்டு இருந்த நிலையில், அவைகளில் தற்போது பல வண்ண மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.
ஊட்டி
சோதனை முயற்சியாக ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் தூலிப்ஸ் மலர் செடிகள் பயிரிடப்பட்டு இருந்த நிலையில், அவைகளில் தற்போது பல வண்ண மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.
தாவரவியல் பூங்கா
ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா கடந்த 100 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. ஆரம்ப காலங்களில் இந்த பூங்காவில் காய்கறிகள் பயிரிடப்பட்ட போதிலும், தொடர்ந்து, அதனை பூங்காவாக மாற்றி அங்கு பல்வேறு மலர் செடிகள், மரங்கள் மற்றும் பெரணி தாவரங்கள் உட்பட பல்வேறு வகையான தாவரங்கள் வைக்கப்பட்டது. இங்கு வெளி நாடுகளில் காணப்படும் பல்வேறு வகையான மலர் செடிகள் காணப்படுகிறது. இவைகளை கடந்த பல ஆண்டுகளாக தோட்டக்கலைத்துறையினர் பராமரித்து வருகின்றனர். அதேபோல், பல்வேறு நாடுகளில் காணப்படும் மரங்களும் இங்கு காணப்படுகிறது.
இந்தநிலையில், இந்த பூங்காவில் ஆண்டு தோறும் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. மலர் கண்காட்சி சமயத்தில் மட்டும் சுமார் 10 லட்சம் பேர் வந்து செல்வார்கள். இந்த மலர் கண்காட்சியின் போது, பல்வேறு வகையான மலர் செடிகள் புதிதாக நடவு செய்யப்பட்டு, அதில் மலர்கள் பூத்துக் குலுங்கும். இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது வழக்கம்.
தூலிப்ஸ் மலர் நாற்றுக்கள்
இந்தநிலையில், இந்த முறை இம்முறை ஆலந்து நாடுகளில் காணப்படும் தூலிப்ஸ் மலர் நாற்றுக்கள் கொண்டு வரப்பட்டு சோதனை முயற்சியாக தாவரவியல் பூங்கா நர்சரியில் வைத்து வளர்க்கப்பட்டது. முற்றிலும் இயற்கை உரங்களை கொண்டே இவைகள் நர்சரிகளில் வைத்து வளர்க்கப்பட்டன. இந்த மலர் செடிகளில் ஒரு வித மணம் வீசும் நிலையில், இவைகளை எலிகள் மற்றும் குருவிகள் கடித்து விடுவதால், அவைகளிடம் இருந்து இரும்பு கம்பிகள் கொண்ட வளைகளை கொண்டு தோட்டக்கலைத் துறையினர் பாதுகாத்து வந்தனர்.
கடந்த 3 மாதங்களாக இந்த மலர் செடிகளை பாதுகாப்பாக வளர்த்த நிலையில், தற்போது இந்த மலர் செடிகளில் பல வண்ணங்களில் மலர்கள் பூக்கத் தொடங்கியுள்ளன. வெள்ளை, இளஞ்சிவப்பு, மஞ்சள் ஆகிய வண்ணங்களில் இந்த மலர்கள் பூத்துள்ளன. தற்போது 50 மலர் செடிகள் உற்பத்தி செய்ய செய்யப்பட்டு உள்ளது.
சோதனை முயற்சியில் வெற்றியடைந்துள்ள நிலையில், தோட்டக்கலை துறையினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும், வரும் கோடை சீசனின் போது, கூடுதல் மலர் நாற்றுக்களை வரவழைத்து மலர் கண்காட்சியின் போது, மாடங்களில் அலங்கரித்து வைப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர். எனவே வெளிநாடுகளில் இருந்து இதற்கு முன்னர் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில் தற்போது முதல் முறையாக தாவரவியல் பூங்காவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.